முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
343

எல

எல்லாம் - மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம். எனது உச்சியுளான்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறாநிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான். இராசாக்கள் அந்தப்புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக்கட்டு ஏறப்போகாநிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று, இறைவன் இவர் திருநெற்றியினின்றும் திருமுடி ஏறப் போகாநின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், ‘அமரரும் எல்லாம் தொழாநிற்க வந்து எனது உச்சியுளான்’ என்கிறார்.

(10)

99

        உச்சியுள் ளேநிற்கும் தேவ
            தேவற்குக் கண்ண பிரானுக்கு
        இச்சையுள் செல்ல உணர்த்தி
            வண்குரு கூர்ச்சட கோபன்
        இச்சொன்ன ஆயி ரத்துள்
            இவையும்ஓர் பத்துஎம் பிராற்கு
        நிச்சலும் விண்ணப்பம் செய்ய
            நீள்கழல் சென்னி பொருமே.


    பொ-ரை :
திருக்குருகூரில் அவதரித்த வள்ளலாரான ஸ்ரீசடகோபர், தமது உச்சியுள்ளே எழுந்தருளியிருக்கின்ற, தேவர்கட்கு எல்லாம் தேவனான கண்ணபிரானுக்கு, அக் கண்ணபிரான் தம்மிடத்து வைத்துள்ள விருப்பத்தைத் தாம் அறிந்த தன்மையை அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்தி, இவ்வாறு உணர்த்திய கருத்தோடு அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துத் திருப்பாசுரங்களையும் இறைவன் திருமுன்னர் ஒருகால் கூறின், அவ்விறைவனுடைய நீண்ட திருவடிகள் கூறுகின்றவர்களுடைய தலைகளில் எப்பொழுதும் சேர்ந்திருக்கும்.

   
வி-கு : ‘கண்ணபிரானுக்குச் சொல்ல உணர்த்திச் சொன்ன இவையும் ஓர்பத்து’ எனக் கூட்டுக. கூட்டி ‘இப்பத்தையும் எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நீள்கழல் நிச்சலும் சென்னி போரும்’ என இயைக்க. ‘நிச்சல்’ என்பது, ‘நித்தல்’ என்பதன் போலி.