முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
364

உடுத்துத் திரியமாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்.

    நம்பியை - நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவனை. தென்குறுங்குடி நின்ற - கலங்காப்பெருநகரத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அத்தை விட்டு என்னைப் பற்றத் திருக்குறுங்குடியிலே காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு நிலையியற் பொருள்போன்று நின்றவன். பரமபதத்தில் குணங்களுக்குச் 1சத்பாவமே உள்ளது ஆதலானும், குணங்கள் நிறம் பெற்று நிறைவுடன் விளங்குதல் இங்கே ஆதலானும், ‘குறுங்குடி நின்ற நம்பியை’ என்கிறார். இதனால், ‘குணங்களில் குறைவுள்ளவன், தூரத்திலேயுள்ளவன் என்று நினைத்து, நான் மறக்க வேண்டுமே,’ என்பதனைத் தெரிவித்தபடி. அச்செம்பொனே திகழும் திருமூர்த்தியை - உபமானம் அற்றதாய், 2ஓட்டு அற்ற செம்பொன் போன்று எல்லை அற்ற ஒளி உருவமாய், வாக்கு மனங்களால் அளவிட்டு அறிய முடியாத திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவனை. இதனால் ‘வடிவழகிலே குறையுண்டாய்த் தான் மறக்கவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

    உம்பர் வானவர் ஆதி அம் சோதியை - உண்டாக்கப்பட்ட இங்கேயுள்ள தேவர்களைப் போன்று அன்றி, மேலான நித்திய சூரிகளுடைய சத்து முதலானவற்றிற்கும் தானே கடவனாய், அவர்களுக்கு அனுபவிக்கத் தகுந்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவனை. இத்தால்: அவ்வழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்தியசூரிகளைச் சொன்னபடி. எம்பிரானை-அவர்கள் அனுபவிக்கும் 3படியை எனக்கு உபகரித்தவனை. என் சொல்லி மறப்பனோ - எத்தைச் சொல்லி மறப்பேன்? 4அபூர்ணன் என்று மறக்கவோ? தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ? வடிவழகு இல்லை என்று மறக்கவோ? மேன்மை இல்லை என்று மறக்கவோ? எனக்கு உபகாரகன் அலன் என்று மறக்கவோ? எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

(9)

 

1. சத்பாவம்-இருப்பு.

2. ஓட்டு அற்ற பொன் - உருக்கிச் சுத்தம் செய்த பொன்.

3. படி என்றது-சிலேடை; பிரகாரமும், திருமேனியும்.

4. ‘அபூர்ணன் என்று மறக்கவோ?’ என்றது முதலான வாக்கியங்களால்,
  மறக்க முடியாமைக்கு மேற்கூறியவற்றையெல்லாம் தொகுத்து
  அருளிச்செய்கிறார்.