முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
14

அவற

    அவற்றுள், அசித்தாகிறது, முக்குணங்களோடு கூடியதாய்3 என்றும் உள்ளதாய், எங்கும் நிறைந்ததாய், எப்பொழுதும் வேறு பாட்டினை அடையக்கூடியதாய், விடத்தக்கது என்று அறியத்தக்கதாய் இருக்கும். இப்படியிருக்கின்ற அசித்தில் இனிமை இருப்பதாக நினைத்துச் சம்சாரத்தை உறுதியாக்கிக்கொள்ளவேண்டும் என்று இருக்குமவனும் சர்வேஸ்வரனைப் பற்றல் வேண்டும்; இது விடத்தக்கது என்னும் நினைவு உண்டாகி, இதனைக் கழித்துக்கொள்ளல் வேண்டும்: ‘என்னை?’ எனின், 1‘சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’ என்று கூறும் சுவேதாஸ்வதர உபநிடதம். 2‘என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, ‘நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது; என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ள வேண்டும்,’ என்றான் இறைவன். அதுதன்னையே இவ்வாழ்வாரும் 3‘பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா, சொல்லாய் யான் உன்னைச் சார்வதுஓர் சூழ்ச்சி,’ என்று அருளிச்செய்தார். 4‘ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லை; 5சர்வ சத்தி கர்மங்கட்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டி அவிழ்துக்கொள்ளும் இத்தனைகாண்; என்றார் பிள்ளை திருநறையூர் அரையர்.

   
சித்து ஆவது, என்றும் உள்ளதாய், அணு அளவினதாய், ஞான ஆனந்த லட்சணமாய், ஞானத்தைப் பண்பாக உடையதாய், விகாரம் அற்றதாய், இறைவனுக்கு என்றும் அடிமைப்பட்டதாய் இருக்கும். இப்படியிருக்கிற ஆன்மாவினுடைய வேறுபட்ட

 

1. சுவேதாஸ்வதர உபநிடதம், அத். 6.

2. ஸ்ரீ கீதை 7 : 14.

3. திருவாய். 3. 2: 3.

4. ‘வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
   தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்’

  என்ற தனிப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.

5. சர்வசத்தி - எல்லா ஆற்றல்களையுமுடையவன்; இறைவன்.