முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
122

18

18

        அடங்கெழில் சம்பத்து, அடங்கக்கண்டு ஈசன்
        அடங்கெழில் அஃதுஎன்று, அடங்குக உள்ளே.

    பொ-ரை : ‘கட்டடங்க அழகியதான செல்வம் முழுவதையும் பார்த்து, அது இறைவனுக்கு அடங்கிய செல்வமாகும் என்று நினைந்து, அச்செல்வத்திற்குள் நீயும் ஒரு செல்வமாக அடங்குக,’ என்றவாறு.

    வி-கு :
‘அடங்கெழில்’ என்பது விகாரம்; அடங்க எழில் என்று பிரிக்க. இரண்டாவது ‘எழில்’ என்பது செல்வம்; எழுச்சிக்குக் காரணமாக இருத்தலின், செல்வம் எழில் எனப்பட்டது. ‘சம்பத்து’ என்பது சொல்லால் ஒருமையாதலின், அதனை ‘அஃது’ என்னும் ஒருமைப்பெயராற்குறித்தார். ‘அடங்குக’ என்பது, வியங்கோள் வினைமுற்று

   
ஈடு : ஏழாம்பாட்டு. அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் என்றார் மேல்; அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும், அளவிட முடியாத இரண்டு விதமான மஹா விபூதியையுடையவனாய் இருந்தான்; இவன் மிகச் சிறியனாய், மிகச் சிறிய உபகரணத்தையுடையவனாய் இருந்தான்; ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ? மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும், திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ? ‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய அலையானது இவனைத் தள்ளாதோ?’ என்னில், இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று நினைத்தால் தானும் அதுவாகச் சேரலாமே! ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய் இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,