முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
25

1

    1‘இப்பிரபந்தங்கள் தோன்றிய மொழியானது, வைதிக காரியங்கள் செய்யப்படும் காலங்களில் பேசத் தக்கது அன்று என்று விலக்கப்பட்ட மொழி ஆதலானும், இப்பிரபந்தங்களை வேதத்திற்கு உரியர் அல்லாதார் கற்கின்றமையைக் காண்கையாலும், இவை கலி காலத்தில் ஞானத்துக்கு அடைவு இல்லாத நான்காம் வருணத்தில் பிறந்தார் ஒருவராலே செய்யப்பட்டன ஆதலானும், இவை வேறு தேசங்களில் இன்றித் தமிழ்தேசத்தில் மட்டும் வழங்குகின்றன ஆதலானும், வேதத்திற்குப் புறம்பான மதத்தினரும் கற்கையாலும், சுருதி ஸ்மிருதிகளில் விலக்கப்பட்ட காம புருஷார்த்தத்தைப் பல இடங்களிலும் பேசுகையாலும், சுருதி ஸ்மிருதிகளில் உறுதிப் பொருள்களாகச் சொல்லப்படுகிற ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காற்கடைக் கொள்ளுகையாலும் இப்பிரபந்தங்கள் பிரமாணம் ஆகமாட்டா,’ என்று வைதிக கோஷ்டியில் பழக்கம் இல்லாத அறிவு கேடர் சிலர் வந்து முரண்பட்டுப் பேச;

    2
வேறு மொழியில் பாடிய கைசிகன் முதலியோரைத் தன் நாட்டினின்றும் வெளியே போகச் செய்த அரசனைப் பார்த்து, 3மக்களுள் உயர்ச்சி பெற்ற அரசனே, பிராமணன், திருமாலின் புகழினைத் தவிர, ஏனையோர் புகழை வேறு மொழியில் பாடக் கூடாது; அங்ஙனம் இருக்கவும், வேறு மொழியில் பாடியதைக் கொண்டு அவனை வெளியே போகச் செய்த காரணத்தால் நீ பாவம் செய்தவன் ஆனாய், என்று இயமன் கூறியதாக மச்சபுராணத்திலே கூறப்படுகின்றது; இக்கூற்றின்படியே, மொழி விலக்கு, பகவானுடைய புகழ்கட்கு இன்று; ஏனையோர் புகழ்கட்கே என்பது பெறப்படுகிறது ஆகையாலும், அவ்வாறு அன்றி, மொழி ஒன்றனையே கொண்டு விதி விலக்குகளை அங்கீகரிக்கில் வடமொழியிலுள்ள வேதத்திற்குப் புறம்பான நூல்களையும் நாம் கற்கவேண்டுமாதலானும், ஆழ்வார் தம்முடைய பேரருளின் மிகுதியாலே வேதத்திற்கு உரியர் அல்லாத பெண்களும் நான்காம் வருணத்தாரும் இழவாதபடி வேதார்த்தத்தைத்

 

1. பாஷை முதலான காரணங்களால் சில அறிவிலிகட்கு விசுவாசக் குறைவு
  பிறக்கும் என்று எண்ணி அவர்கட்கு ருசி விசுவாசங்கள் பிறக்கைக்காக,
  இப்பிரபந்தங்கள் சிறந்த பிரமாணங்கள் என்று இவற்றினுடைய பிராமாண்ய
  அதிசயத்தை ஆஷேப சமாதான ரூபமாக அருளிச்செய்கிறார்,
  ‘இப்பிரபந்தங்கள் தோன்றிய மொழியானது’ என்று தொடங்கி.

2. ‘வேறு மொழியில் பாடிய கைசீகன்’ என்றது முதல் ‘முன்கூறியவற்றை
   மறுத்தார்கள்’ என்றது முடிய, முற்கூறிய வினாக்களுக்கு விடை.

3. மச்ச புராணம்.