முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
287

New Page 1

துஞ்சக்கொடான் என்பதற்கு, ‘ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக்கொடான்’ என்று பொருள் கூறலுமாம்.

    ‘அவன் என்கிறது யாரை? அவன்தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம்?’ என்னில், அதனை விரித்து விளக்குகிறார் மேல் : எப்பால் எவர்க்கும் - எல்லா இடத்திலும் உண்டான எல்லார்க்கும். இட வேற்றுமையாலும் உடல் வேற்றுமையாலும் வரக்கூடிய சில உயர்வுகள் உள அன்றே? பூமியைப் போன்றது அன்றே சுவர்க்கம்; மனிதர்களைப் போல் அல்லரே தேவர்கள்; இவ்விரண்டும் அடங்க ‘எப்பால் எவர்க்கும்’ என்கிறார். ‘அப்பால், இப்பால்’ என்பன போன்று ‘பால்’ என்பது இடத்தைக் காட்டும். நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் - ஆனந்தத்தாலே மேலே மேலே சென்று, பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் 1‘எந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீள வேண்டும்படியான ஆனந்தத்தின் மிகுதியை யுடையவன், அதாவது, மனிதர்களுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் தேவர்களுடைய ஆனந்தம்; அவர்களுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் இந்திரனுடைய ஆனந்தம்; அவனுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் சிவனுடைய ஆனந்தம்; அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் பிரமனுடைய ஆனந்தம் என்று இப்படி ஏற்றிக்கொண்டே சென்று கூறப்படுகின்றதாய், இதைக் காட்டிலும் மேம்பாடு இல்லாததாய் உள்ள ஆனந்தத்தையுடையவன் என்றபடி, ‘ஆனந்தமய’ என்பது வேதமொழி.

    எங்கள் ஆயர் கொழுந்தே - ‘இப்படி அறப் பெரிய இறைவன் மற்றையாரோடு ஒத்த சாதியையுடையவனாய் வந்து அவதரித்தது, தன்னை அடைந்தவர்கள் ஐம்புல ஆசையினராய் முடியும்படி விட்டுக் கொடுக்கவோ? தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது, தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ? மேன்மைக்கு

 

1. தைத்திரீய, ஆனந்த. 1 : 9.

2. ‘எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள்
  ஆயர் கொழுந்து,’ என்று கூட்டிக் கருத்து அருளிச்செய்கிறார், ‘இப்படி
  அறப்பெரிய இறைவன்’ என்று தொடங்கும் வாக்கியங்களால்
  இவ்வாக்கியங்கள் ‘அவன்தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம்?
  என்னில்’ என்று மேலே அருளிச்செய்ததற்கு விடை. ‘நலத்தால் உயர்ந்து
  உயர்ந்து’ என்றதனையும், ‘எங்கள் கொழுந்து’ என்றதனையும் நோக்கி
  அருளிச்செய்யும் பாவம் - ‘தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது’
  என்று தொடங்கும் வாக்கியங்கள் இரண்டும்.