முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
59

நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார். ‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன, 1‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத்தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார். அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார். 2‘ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில், தாம் அகப்பட்ட துறை அக்குணங்களாகையாலே அவற்றையே முதன்முன்னம் பேசுகிறார். இறைவன், இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

    உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன் - பகவானுடைய ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மனிதர்களுடைய ஆனந்தம் தொடங்கிப் பிரமானந்தத்து அளவும் சென்று பின்னையும் அதற்கு மேல் 3உத்பிரேக்ஷித்துக்கொண்டு சென்று பின்னையும் அளவிட்டு அறியமாட்டாது, 4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன? இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலையமாகப் பேசுகிறார் இவர். 5இறைவனின் வேறுபட்ட எல்லாப் பொருள்களிலும் எல்லா வகையாலும் வருகின்ற மேன்மையினை ஈண்டு ‘உயர்வு’ என்கிறார். அற - அம்மேன்மை இன்றியே ஒழிய; ஈண்டு ‘அற’ என்றது, மற்றைத் தெய்வங்கள் உயர்வே இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; இறைவனுடைய மேன்மையினையும் பிற தெய்வங்களினுடைய

 

1. ஸ்ரீராமா. கிஷ். 4 : 12. இது, அனுமன் கேட்ட கேள்விக்கு இலக்குமணன்
  கூறும் விடை.

2. முதற்பாட்டுக்கு இரண்டுவகையில் அவதாரிகை, ஒன்று, ‘மனமே, நமக்குப்
  பல உதவிகளைச்செய்த இறைவனுடைய திருவடிகளை வணங்கு, என்பது.
  மற்றொன்று, ‘இறைவன் நற்குணக்கடலாதலின், இளைய பெருமாளைப்போன்று,
  நீயும் குணங்கட்குத் தோற்று அவனை வணங்கு,’ என்பது. இரண்டாவது
  அவதாரிகை, ‘உயர்வற உயர்நலமுடையவன், துயரறு சுடர் அடி தொழுதெழு’
  என்பதில் நோக்காக எழுந்தது.

3. உத்பிரேஷித்தல் - தாம் எண்ணியவாறு புனைந்துரைத்தல்; தற்குறிப்பேற்றம்.

4. தைத்திரீ. ஆன. 9 : 1.

5. ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன்’ என்றதனை நோக்கிப் ‘பேசுகிறார்
  இவர்’ என்கிறார்.