முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
67

New Page 1

‘உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்; மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி; அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று ஒரே தொடராகக் கொள்க. இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு; மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’ எனத் தனித்தனி தொடராகக் கோடலும் பொருந்தும் அங்ஙனம் கொள்ளுமிடத்து, 1‘கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க. ஆயின், ‘உயர்வற உயர்நலம் உடையவன் அயர்வறு மமரர்கள் அதிபதி’ என்று இறைவனுடைய தன்மைகளை ஒரு சேரக் கூறி, பின் அவன் செய்த உதவியை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ன வேண்டியிருக்க, ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்ற பின்னர், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று அவ்வளவும் போகமாட்டாமல் 2உபகாரத்தின் நினைவாலே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிறார்.

    இப்பாட்டால், ‘இறைவனுக்குக் குணமில்லை; விக்கிரகம் இல்லை; விபூதி இல்லை’ என்று சொல்லுகின்றவர் எல்லாரும் மறுக்கப்பட்டவராவர், அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டா; தமது மதத்தை நிலை நிறுத்தவே, மற்றைய மதங்கள் மறுக்கப் பட்டனவாம். 3நெற்செய்யப் புல்தேயுமா போலே, தாமாகவே மறுக்கப்பட்டவர் ஆவர்கள் அவர்கள். ‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே 4பிராப்பிய வேஷம் சொல்லிற்று; ‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று; ‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது; ‘தொழுது எழு’ என்கையாலே 5பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று; ‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக்கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.

 

1. பகவத்கீதை. 11 : 40.

2. இறைவன் செய்த உபகாரங்களை இத்திருப்பாட்டின் அவதாரிகையின்
  முதலிலே காண்க.

3. ‘நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
   தற்செய்யத் தானே கெடும்’

  என்பது பழமொழி நானூறு, செய். 53.

4. பிராப்பிய வேக்ஷம் - அடையப்படுகின்ற இறைவனுடைய தன்மை.

5. பிராப்தி பலமான கைங்கரியம்-அடைதற்குப் பலமான தொண்டு.