முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
68

2

2

        மனன்அகம் மலம்அற மலர்மிசை எழுதரும்
        மனன்உணர் வளவிலன் பொறிஉணர் வவைஇலன்
        இனன்உணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
        இனன்இலன் என்னுயிர் மிகுநரை இலனே.

   
பொ-ரை : ‘மனத்தின் குற்றங்கள் எல்லாம் நீங்க, பின்பு மலர்ந்து மேலே எழுகின்ற மனத்தினுடைய யோக ஞானத்தால் அறியப்படுகின்ற ஆத்துமாவின் தன்மையினையுடையவன் அல்லன்; இந்திரியங்களால் அறியப்படுகின்ற உலகத்துப் பொருள்களின் தன்மையினையுடையவன் அல்லன்; எதிர்வு நிகழ்வு இறப்பு என்னும் முக்காலங்களிலும் தனக்கு ஒத்தாரை இல்லாதவன்; மிக்காரையும் இல்லாதவன்; ஞான ஆனந்தமயமாக இருப்பவன்; இத்தகைய இறைவன் என்னுடைய சிறந்த உயிர் ஆவான்’ என்றவாறு.

    வி-கு :
‘மனனகம்’ என்பதில் அகம் ஏழனுருபு. ‘அற மலர்ந்து எழுதரும் உணர்வு’ என முடிக்க. முதலிலுள்ள உணர்வு என்னுஞ்சொல் ஈண்டு உயிரைக் காட்டிற்று. இரண்டாவது உணர்வு, உணரப்படுகின்ற பொருள்களைக் குறித்தது. ‘என்னுயிர்’ என்பதனை எனன் உயிர் எனப்பிரிக்க. மிகுநர், ஒரு சொல். ஐ என்பது, இரண்டனுருபு.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ, எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்; அவன்தான் பரம்பொருள்,’ என்று மறைமொழி கூறியவாறே, 2காரிய வடிவமான உலகத்தை முன்னர்க்கூறி, ‘அவ்வுலகத்திற்கு எல்லாம் காரணமாக விளங்குகின்ற இறைவன் ஒருவன் உளன்; அவன் தியானம் செய்யத்தக்கவன்,’ என்று கூறுதல் ஒரு முறை; அவ்வாறு அன்றி, இறைவனை முன்னர்க் கூறி, பின்னர் அவனால் படைக்கப்பட்ட உலகங்களைக் கூறுதல் ஒரு முறை; இவ்விருமுறைகளுள் ஒன்றிலும் செல்லாது முற்படக் குணங்களிலே இழிவான் என்?’ என்னில்,

 

1. தைத்திரிய. பிருகு. 1.

2. ‘காணப்பட்ட உலகாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின்,
  ‘ஆதிபகவன் முதற்றேயுலகு’ என உலகின்மேல் வைத்துக் கூறினாரேனும்,
  ‘உலகிற்கு முதல் ஆதிபகவன்’ என்பது கருத்தாகக் கொள்க’ என்னும்
  பரிமேலழகருரை ஈண்டு ஒப்பு நோக்கல் தகும். (திருக்குறள். 1. பரி.)