முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
76

தள

தளவும் நினைக்கிறது; விசும்பிடைஎன்கிற இது பரமபதத்திற்கு இப்பால் உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது. உருவினன் - சரீரங்களையுடையான். ஆக, கீழ் மேல் உண்டான உயிர்ப்பொருள்களையும் உயிரல் பொருள்களையுமுடையான் என்றபடி. இதனால், ‘ஒவ்வோர் இடப்பகுதியின் செல்வங்களை உடையவர்களது அன்று லீலாவிபூதி; எல்லாக்கடவுளர்கட்கும் மேம்பட்ட இறைவனுடைய,’ என்பதனைத் தெரிவித்தபடி. 1காராயின காளநன் மேனியினன்’ என்புழி, ‘மேனியினன்’ என்பது மேனியினையுடையான் எனப் பொருள்படுமாறு போன்று, ஈண்டு உருவினன், அருவினன் என்பனவும், உருவினையுடையான், அருவினையுடையான் எனப் பொருள்படும்.

    ‘ஆயின், இப்படி எல்லாவற்றையுமுடையவனாய் இன்பத்திலே கருத்து ஊன்றினவனாய் ஒப்பு உயர்வு அற்ற சாந்து அணிந்து கொண்டு அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டில் தங்கி இருப்பானோ இறைவன்?’ எனில், புலனொடு - இவை பட்டனவற்றைத் தானும் பட்டு, 2உடன் கேடனாய் நின்று நோக்குவான் என்கிறார். புலன் என்றது, ‘பார்க்கப்படுகின்றவை, கேட்கவும் படுகின்றவை’ என்னுமாறு பிரமாணங்களால் அறியப்படுகின்ற பொருள்களை. இவற்றை உண்டாக்கி, உயிர் வழியாக அநுப்பிரவேசித்துப் பின்னர் இவற்றிற்குப் பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாம்படி செய்து, 4‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய்ச் சர்வர்க்கும் ஆத்துமாவாய் இருக்கும் படியை’ ‘ஓடு’ என்பது காட்டுகிறது. ‘ஆயின், தான் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராய் நின்றால், சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ, உயிர்களுடைய இன்பதுன்பங்களோ தன்னையும் பொருந்தும்படி இருக்கின்றானோ?’ என்னில், புலன் அலன் - தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்; 5அவ்வப்பொருள்களினுடைய தன்மைவேறுபாடுகளும் இன்பதுன்பங்களும் தன்னைத் தீண்டாவண்ணம் இருப்பான் என்பதாம். 6‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,

 

1. திருவாய். 9. 3 : 1.

2. உடன் கேடன் - தானும் கூடக் கெட்டுக்கிடக்குமவன்.

3. தைத்திரீய. ஆன. 6.

4. தைத்திரீயம்.

5. ‘தோய்ந்தும் பொருள் அனைத்துந் தோயாது நின்ற சுடரே’ என்றார்
  கம்பநாடரும்.

6. இருக்கு வேதம்.