முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
84

New Page 1

குணத்திற்குத் தகுதியாய்ப் பிறந்த ஞானமும் இருத்தலால் என்க. 1ஆக, தத்தமுடைய குணங்கட்குத் தகுதியாக அடைகின்றவர்களாகவும் அடையப்படுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதாம். ஈண்டு ‘அறிவு’ என்றது சுவை மூலமாக விரும்பப் படுகின்ற பலத்தின் விஷயமான ஞானத்தினை. இனி, ‘அறிவறி வகை வகை’ என்பதற்கு, (மக்கள் தாம் தாம் விரும்புகின்ற பலத்தின் விஷயமாக) அறிந்த அறிந்த வழிகளின் வகைகளாலே என்று பொருள் கூறலும் ஒன்று. ஈண்டு ‘அறிவு’ என்றது வழியின் சம்பந்தமான ஞானத்தினை. ஒரே பலத்தை அடைவதற்குப் பல வழிகள் உள்ளனவாதலின், ‘அறிவறி வகைவகை’ என்கிறார்.

    அவர் அவர் இறையவர் என - அவ்வத்தேவர்களை அடையத்தக்க தெய்வங்கள் என்று நினைந்து, அடி அடைவர்கள் - அவர்கள் பாதங்களைச்சேர்வார்கள். ஆயின், திருமகள்கேள்வனான இறைவனைத் தவிர மற்றைத்தேவர்களை வணங்குவதற்குரிய முறைகள் செய்தற்கு அரியவைகள்; அவர்களும் வழி அல்லா வழிகளால் ஆராதிக்கப் படுகின்றவர்கள்; 2மகனை அறுத்துத்தா’, ‘ஆட்டினை அறுத்துத் தா’ என்று கூறுகின்றவர்கள்; அவர்கள் செயல் அவ்வாறு இருக்க, அவர்களை ஆராதிக்கும் முறையினை ‘அடியடைவர்கள்’ என்று மிக எளிய செயலாகக் கூறுகின்றார் இவர்; ‘காரணம் என்னை?’ எனின், அடைதலாவது, அத்தேவர்களின் காலிலே குனியுமதற்கு அவ்வருகு இல்லை என்கிறார் இவர், தம்முடைய கோஷ்டியின் பிரசித்தியாலே. 3‘இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும் மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,’ என்கிறபடியே, ஓர் அஞ்சலியினாலேயே நினைத்த பலனைத் தரக்கூடிய பரம்பொருளோடேயே தமக்கு வாசனை; இப்படி, குணங்களால் மேம்பட்டவனாய் அடையக் கூடியவனாய் இருக்கின்ற இறைவனுடைய பயிற்சியின்

 

1. மேற்கூறியவாற்றால், குணங்கட்குத் தகுதியாக ருசிகளும், ருசிகளுக்குத்
  தகுதியாகப் பலன்களும், பலன்களுக்கு ஈடாகச் சாதன பேதங்களும்
  உண்டாகின்றன என்பது பெறப்படும்.

2. ‘மகனையறுத்துத்தா,’ என்றது, சிறுத்தொண்ட நாயனார் தம் மகனை அறுத்துச்
  சிவபெருமானுக்கு உணவருத்தினமையைக் குறித்தபடி. ‘ஆட்டினையறுத்துத்
  தா,’ என்றது, முருகனைப் பற்றியது. இதனை ‘மறிக்குரல் அறுத்துத்
  தினைப்பிரப்பு இரீஇ’ என்னும் குறுந்தொகைச் செய்யுளாலும், ‘சிறுதினை
  மலரொடு விரைஇ மறியறுத்து’ (218) என்னும் திருமுருகாற்றுப்படையாலும்
  உணர்க.

3. பரத்துவாச சம்ஹிதை.