முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
218

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதேகொள்’ என்பது பொருளாம். அன்றி, மேல் பாசுரத்தில் ‘வைக்கவே வகுக்கின்று’ என்று தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’ ‘தாய்முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதேகொள்’ என்கிறாள் என்னுதல்;

    உயிர் உடல் ஆழிப் பிறப்பு வீடு முதலா முற்றும் ஆய்-உயிரானது, சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினது வீடு உண்டு மோக்ஷம்; அது முதலான உறுதிப்பொருள்களைப் பெறுகைக்காக, அன்றி, ‘ஆழிப்பிறப்பு’ என்பதற்கு, ஆழி என்று கடலாய், அத்தால் கம்பீர்யமாய், ‘எல்லை அற்ற பிறப்பு’ என்று பொருள் கூறலும் ஒன்று. ‘ஆயின், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள், வீட்டினை முன்னர்க் கூறுவான் என்?’ எனின், படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் ஆகையாலே அதனை முன்னர்க் கூறுகின்றாள். இனி, ‘உடல் ஆழிப்பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்’ என்பதற்கு, ‘உடலினுடைய எல்லை இல்லாத பிறப்புகள்தோறும் உண்டாகின்ற தேவர்கள் முதலான சரீரங்களில் தங்கியிருக்கின்ற உயிர்கள் முதலான காரியக்கூட்டத்தை உண்டாக்குகைக்காக’ என்று பொருள் கூறலும் ஆம். 1‘எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.

    ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும். அடல் ஆழி அம்மானை-படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக 3ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண்வளர்ந்தருளுவது. கண்டக் கால்-என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்பட்டு இருக்கிறது?

 

1. தைத். ஆனந். 6 : 91
2. மனு ஸ்ருதிமி. 1 : 8.
3. ஆசு-ஆயுதத்தின் பிடி.