முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
9

1த

    1திருவருளைச் செய்ய, 2‘பகவான்’ என்னும் திருநாமத்தையுடையவனும், எக்காரியங்களையும் வருத்தம் இன்றிப் பயனுடன் முடியும்படி செய்கின்றவனும், பசுக்களின் வளர்ச்சியை விரும்புகின்றவனும் ஆன கண்ணபிரான், தனது தூய்மையான மனத்தினால் 3‘பிருந்தாவனம் புற்கள் நிறைந்த காடாக மாறல்வேண்டும்,’ என்று நினைந்த அளவில், 4‘தோன்றிய புற்களாலே நிரம்பி, இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் பரவப் பெற்ற பூமியானது, இடையிடையே பதுமராகக் கற்கள் பதித்த மரகதமணி மயமானது ஓர் இடத்தைப் போலத் தோன்றியது,’ என்னலாம்படி மாறியது போன்று, இவரும் உண்மைப் பொருள்களை உள்ளவாறு 5விளக்கமாக அறிய வல்லவரானார்.

    6மற்றை மதங்களிலே தத்துவங்களைப் பதினாறு என்பாரும், ஆறு என்பாருமாய் இன்னோரன்ன பல வகைகளிலே மாறுபட்ட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பர். ‘எங்ஙனம்?’ என்னில், 7உலோகாயதிகர், ஆகாயம் நீங்கலாக உள்ள மண் முதலான பூதங்கள் நான்கனுடைய கூட்டரவிலே அறிவு என்னும் ஒரு தர்மம் பிறக்கும்; அதற்கு உண்டான இன்ப துன்பங்களே சுவர்க்க நரகங்கள்; அவற்றினுடைய பிரிவிலே அறிவு அழியும்; அவ்வருகு ஒன்றும் இல்லை என்பர்.

 

1. ‘அவன் செய்த திருவருள் பலித்த இடம் உண்டோ?’ என்ன, ‘உண்டு’ என்றும்,
  திருவருள் புரிந்ததும் இன்னதற்காக என்றும், பின் அவர்தாம்
  இன்னபடியானார் என்றும் அருளிச்செய்கிறார் ‘திருவருளைச் செய்ய’ என்றது
  முதல் ‘அறிய வல்லவரானார்’ என்றது முடிய. ‘திருவருளைச் செய்ய’
  என்பதிலுள்ள ‘செய்ய’ என்னும் எச்சத்தை ‘அறிய வல்லவரானார்’
  என்றதனுடன் முடிக்க. இடையிலுள்ளது, இறைவன் ‘மதி நலம் அருள’ இவர்
  ‘மயர்வு அற்றதனை’ விளக்க வந்த உவமை.

2. ஸ்ரீ விஷ்ணு புராணம்

3. பிருந்தாவனம் - நெருஞ்சிற்காடு

4. ஸ்ரீ விஷ்ணு புராணம்

5. விளக்கமாக அறிதலாவது, பரோபதேசம் செய்வதற்குத் தகுதியாக ஐயம் திரிபு
  அற அறிதல்.

6. ‘உண்மைப் பொருள்களை உள்ளவாறு விளக்கமாக அறிய வல்லவரானார்’
  எனின், ‘உண்மைப்பொருள்களை அறிவதில் மயக்கம் உளதோ?’ என்னும்
  வினாவிற்கு விடையாக, உண்மைப்பொருள் விஷயமாகவுள்ள மாறுபட்ட
  கொள்கைகளை அருளிச்செய்து, ‘நம் தரிசனத்திற்குத் தத்துவங்கள் மூன்று.’
  என்று நமது கொள்கையினையும் அருளிச்செய்கிறார் ‘மற்றை மதங்களிலே’
  என்று தொடங்கி, பதினாறு என்பவர், நையாயிகர். ஆறு என்பவர்,
  வைசேஷிகர்.

7. உலோகாயதிகர் - உலகத்தில் பரந்த கொள்கையினையுடையவர்.