முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
91

New Page 1

‘திடம்’ என்ற அடை புணர்த்து ஓதினார் எனக்கோடலுமாம். இனி, 1‘காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,’ என்கிற அருகமதத்தாரை மறுக்கும்பொருட்டு, விசும்பிற்குத் ‘திடம்’ என்ற அடையினைத் தந்து அருளிச்செய்தார் என்றலும் ஒன்று. ஆக, ஐம்பூதங்களையும் அருளிச்செய்கிறார். இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் - இவற்றை அடியாகக்கொண்டு மேலே பரந்து விரிந்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி. ‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. 2‘பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், 3வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி. அவை அவைதொறும்-அவ்வப்பொருள்கள் தோறும். அப்பொருள்களில் நிறைந்து நிற்குமிடத்துப் பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி ஒவ்வொரு பொருளிலும் அவ்வச்சாதித்தன்மை நிறைந்திருத்தல் போன்று எல்லாப்பொருள்களிலும் தனித்தனியே குறைவு அற நிறைந்து நிற்பான் என்பார், ‘அவை அவைதொறும்’ என்கிறார்.

    உடல் மிசை உயிர் என - இப்படி நிறைந்து நிற்குமிடத்தில், இச்சரீரத்துக்கு ஆன்மா தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பதுபோன்று, இச்சரீர ஆத்துமாக்களுக்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பான். கரந்து - இப்படி இருக்கவும், 4‘எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ என்கிறபடியே, பிறர்களால் காண முடியாதவனாய் இருப்பான். எங்கும் பரந்து உள்ளும் புறமும் நிறைந்து ‘இதற்குப் பிரமாணம் என்?’ என்னில், உளன் சுடர்மிகு சுருதியுள் - புருஷனால் செய்யப்படாததாய், குற்றம் இல்லாததாய் இருக்கிற வேதங்களால் சொல்லப்பட்டவன். பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் போன்று வேறு காரணங்களால் கழித்துத் தள்ள ஒண்ணாதபடி இருத்தலின், ‘சுடர்மிகு’ என்றும், முன்னர் உள்ள பெரியோர்கள் கூறி வந்த முறையைப் பின்பற்றியே பின் வருகின்றவர்களும் கூறிக்கொண்டு வருகின்றமையின், ‘சுருதி’ என்றும் அருளிச்செய்கிறார். இத்தால், முதல் பாசுரம் தொடங்கிச் சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணம் குற்றமற்ற வேதங்கள் என்கிறார். இவை உண்ட சுரன் - இவற்றை அழித்த தேவன்.

 

1. பார்ஹஸ்யபத்திய சூத்
2. தைத்திரீய. ஆன. 6. 3.
3. வைதிக நிர்த்தேசம் - மறைமொழி.
4. பிரஹதாரண்யம்.