முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
93

    ஈடு : எட்டாம்பாட்டு. ‘வேதங்களால் பேசப்பட்ட துணிந்த பொருள் அவனே என்றும், எல்லாப் பொருள்கட்கும் ஆத்துமாவாக நிற்கின்றவன் அவனே என்றும் சொல்லுகின்றீர்; மற்றையோரும் ஒவ்வொரு காரியத்திலே அதிகரித்து அவற்றை நடத்தியன்றோ போருகிறார்கள்? பிரமன் படைத்தலுக்கு உரியவனாய், சிவன் அழித்தலுக்கு உரியவனாய் அன்றோ போருகிறார்கள்? இவற்றை ஒருவனே செய்கின்றான் என்று நீர் கூறின் பக்ஷபாதத்தால் கூறினீர் ஆகீரோ?’ என்ன, ‘ஒருவனே செய்கிறான் என்று பக்ஷபாதத்தால் சொல்லுகிறேன் அல்லேன்; பிரமாணங்களின் போக்குகளை ஆராய்ந்தால் 1அவை அவர்கள் பக்கல் கிடவாமையாலே சொல்லுகிறேன்,’ என்கிறார்.

    சுரர் அறிவு அரு நிலை விண்முதல் முழுவதும் வரன் முதலாய் - பிரமன் முதலிய தேவர்களால் அறிய அரிய தன்மையினையுடைய மூலப்பகுதி தொடக்கமாக உண்டான எல்லாவற்றுக்கும் சிறந்த காரணமாகி. 2‘ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும் கோத்துக் கொண்டு கிடக்கிறது?’ என்று உபநிடதத்தில் கார்க்கி வித்தையில் ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே இவரும் ‘விண்’ என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறார். ‘ஆயின், அங்கு ‘ஆகாயம்’ என்ற சொல் மூலப்பகுதியைத்தான் காட்டுகிறது என்று கொள்ளுமாறு யாங்ஙனம்?’ எனின், 3ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று சொல்லப்படுமவன் பரம்பொருளே,’ என்பது பிரம சூத்திரம் ஆதலின், மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை உபசாரத்தால் அருளிச்செய்கிறார் என்பதாம். காரண நிலையில் கண்களுக்குப்புலப்படாத உருவத்தோடு அவற்றில் நிறைந்து அவற்றைத் தன்மேலே ஏறிட்டுக்கொண்டு நோக்கியும், காரியமாம் அளவில் 4அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் சூக்குமரூபத்

 

1. இவ்விடத்தில், பரிபாடலின் முதற்பாடல்: 43 - 46 அடிகள். மேலும் மூன்றாம்
  பாடல் : 1 - 14 அடிகள், 71 - 72 அடிகள்.  நான்காம் பாடல் : 66 - 70
  அடிகள், பதின்மூன்றாம் பாடல் : 37-ஆம் அடி ஆகிய இவற்றைப் படித்து
  அறிதல் தகும்.

2. பிரஹதாரண்யம், 5 : 8.

3. சாரீரக மீமாம்சை, சூ. 9.


4. அவ்யக்தம் - கடம், படம் முதலியவற்றை அறிகின்ற கண் இந்திரியத்தால்
  அறியப்படாமல் இருப்பது என்பது பொருள்.