முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
98

New Page 1

வுருவுகள் - இறைவன் உளன் ஆனால், அவனால் நியமிக்கப்படுகின்ற இவ்வுலகத்தோடு கூடியே இருத்தல் வேண்டும்; அவன் உளனாமிடத்தில், ‘யாவன் ஒருவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரம்? யாவன் ஒருவனுக்கு இவ்வுலகமானது சரீரம்?’ என்கிறபடியே, இவ்வுலகம் அவனுக்குச் சரீரமாய் இருப்பதனால் உரிமைப்பட்டதாய் உண்டாம். உளன் அலன் என்பாயோ? அப்போது இன்மை என்னும் தர்மத்தையுடையவனாய்த் தோன்றுவான் இவ்வருவுகள் அவன் அருவம் - அப்பொழுது இல்லை என்ற சொற்குப் பொருளாய் வேறொரு தன்மையினை அடைந்ததாய்க் கொண்டு இவற்றின் அன்மை தோன்றும். ‘எங்ஙனம்?’ எனின், ‘குடம் இருக்கிறது,’ என்றால் வாயும் வயிறுமான உருவம் தோன்றும்; ‘குடம் இல்லை,’ என்றால், இல்லை என்னும் தர்மத்தோடு கூடியதாய் வேறொரு வகையால் அது தோன்றும்; அதாவது, இங்கு இல்லை என்றதாகில், வேறு ஓர் இடத்திலே உண்டாம்; இப்போது இல்லை என்றதாகில், வேறு ஒரு காலவிசேடத்திலே உண்டாம்; எங்கும் எப்போதும் ஒரு வகையாலும் குடம் இல்லை என்னுதல் கூடாமையால், 1நிருபாதிக நிஷேதம் இல்லையன்றே?

    உளன் என இலன் என இவை குணம் உடைமையின் - உளன் என்கிற இத்தனையும் இலன் என்கிற இதனையும் குணமாக உடையவன் ஆகையாலே, இவை இரண்டும் இரண்டு தர்மமாயின. உளன் இருதகைமையோடு - உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு தன்மையாலும் உளன் ஆனான். ஒழிவிலன் பரந்தே உளன் - நான் உளன் என்ற சொல்லாலே உண்மையைச் சாதித்தேன்; நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையைச் சாதித்தாய்; ஆக, இருவருமாக உண்மையைச் சாதித்தோம் என்க. இனி, ‘அவன் உளன் ஆனால் உளனாமாறு போன்று, விபூதியோடு கூடியவனாய் உள்ளவனாக அமையாதோ?’ என்கிறார் எனலுமாம். 

(9) 

10

        பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துஉளன்
        பரந்தஅண்டம் இதுஎன நிலம்விசும்பு ஒழிவறக்
        கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
        கரந்துஎங்கும் பரந்துஉளன் இவைஉண்ட கரனே.

 

1. நிருபாதிக நிஷேதம் - காலதேசங்கட்கு உட்படாத விலக்கு.