முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
109

என

என்னின், சிறுகுழந்தை கையிலே பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால், போகடச்சொல்லி, பின்னர், ‘பாம்பு’ என்பாரைப் போலேயும், ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘வெளியே வா,’ என்று சொல்லி, பின்னர், ‘நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார். ‘ஆயின், அத்தகைய தீயசெயல் இவ்வுயிர்கட்கு யாது?’ எனின், பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவைதாம் நோவுபடுகின்றன? 1‘புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ என்றும், 2‘என்னால் விடப்பட்டது இலங்கை’ என்றும் விடுகை முன்னாக அன்றோ 3முன்பு பற்றினவர்களும் பற்றினார்கள்? ‘ஆயின், ‘வீடுமின்’ என்ற பன்மைக்குக் கருத்து யாது?’ எனின், பொறிவாயில் ஐந்தையும் அவித்த ஒருவன் வந்து முன்னே நின்று கேட்க, அவனுக்கு உபதேசிக்கிறார் அல்லர்; சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.

    முற்றவும் - சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும் சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று, யான் எனது என்னுஞ் செருக்கால் கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில் சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே! ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார். வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் 4அழுகு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி.

    உம் உயிர் வீடு உடையானிடை - 5‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில். அன்றி, இதற்கு, ‘உம்உயிரைச் சரீரமாக உடையவனிடத்தில்’

 

1. ஸ்ரீராமா. யுத். 17 : 14.

2. ஸ்ரீராமா. யுத். 19 : 5.

3. முன்பு பற்றினவர்கள் - விபீஷணன் முதலியோர்.

4. அழுகுசிறை - அழுகுதற்குக் காரணமான சிறை. இங்கு ‘ஒழுகு சிறை’ என்ற
  பாடம் சிறக்கும்.

5. பிரஹதாரண்யம்.