முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
110

என

என்றும், ‘உம்உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ என்றும்,  (ஈண்டு, விடுதல் - சமர்ப்பித்தல்.) ‘உம் உயிரை வீட்டினை (அதாவது - மோக்ஷத்தினை) உடையவனிடத்தில்’ என்றும் பொருள் கூறலும் ஆம். ‘அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ? நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்பார், ‘உயிர்’ என்றும், ‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ என்பார், ‘உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார். பொதுவிலே ‘உடையானிடை’ என்கிறார்; சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால் 1வண்புகழ் நாரணன்’ என்கைக்காக.

    வீடு செய்மின் - அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக்கொண்டிருக்கிறான்; ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்; அதாவது, அவன் உடையவனான பின்பு அவ்விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம். அவ்விவாதம் இல்லாமையையே ஈண்டு ‘வீடு செய்மின்’ என்கிறார். ‘இதனால் பேறு என்?’ என்னில், 2வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம். ‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது, மிகத்தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம். மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும். உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப்பொருள். மற்றும், போகடுகிற பொருள்தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே? ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடுசெய்மின்’ என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை. 3‘குறித்த ஒரு சிலரை மட்டும் நியமிக்கின்ற யமனையும் நியமிக்கின்றவனாயும், சூரியமண்டலத்திலிருப்பவனாயும், அவ்யமனைப்போன்று ‘சுடு, சுட்டு ஆக்கு’ என்று கூறுதல் இன்றி, எல்லார்க்கும் இனியனவே செய்கின்றவனாயும், அந்தர்யாமிப் பிராஹ்மணத்தில் கூறப்படும் ஏற்றத்தையுடையவனாயும், இருக்கும்

 

1. திருவாய். 1. 2 : 10
2. பிராயச்சித்தம் - கழுவாய்
3. மனு ஸ்மிருதி, 8 : 92.