முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
116

    ஈடு : நாலாம்பாட்டு. 1விடப்படுகின்ற பொருள்கள் போன்று இன்பம் அற்றனவாயும், குற்றங்களையுடையனவாயும் இராது என்று பற்றப்படுகின்ற பொருளின் இனிமையினை அருளிச்செய்கிறார்.

    இல்லதும் - 2பிரமாணங்களால் அறியக்கூடாததாய், முயற்கொம்பு என்பது போன்று உலகத்திலே இல்லாததாய் உள்ள தன்மையினைப் பற்றவாதல், 3இப்பி வெள்ளியாகத் தோன்றுதல் போன்று கண்களுக்குத் தோன்றுகிற அளவேயாகிப் பின் பிரமாணங்களைக் கொண்டு நோக்கின் இல்லை என்று கூறத் தக்கதாயுள்ள தன்மையினைப் பற்றவாதல் ‘இல்லது’ என்கிறார் அல்லர்; தோன்றி மறையும் மின்னலைப் போன்று, அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’ என்கிறார். உள்ளதும் - அழிந்து போகும் பொருளினும் வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’ என்கிறார். 4‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ என்று விஷ்ணு புராணமும், 5‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ என்று தைத்திரீய உபநிடதமும் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. இனி, இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘உயிருக்கு வீடாக உள்ள உடலும், அவ்வீட்டிற்குள் தங்கியிருக்கின்ற உயிரும்’ என்று பொருள் கூறலுமாம்.

    அல்லது அவன் உரு - அழிந்து போகின்ற சரீரத்தின்படியும் அன்று; உடலின் சேர்க்கையால் ‘நான் சுகத்தையுடையவன்,’ என்கிற ஆத்துமாவின்படியும் அன்று அவன் சொரூபம். ‘ஆயின், எங்ஙனம் இருக்கும்?’ என்னில், எல்லை இல் அந்நலம் - 6‘ஆனந்த

 

1. விடப்படுகின்றவை, சித்தும் அசித்தும். இன்பமற்றதாயும்
  குற்றங்களையுடையதாயும் இருப்பது, அசித்து. குற்றங்களையுடையது, சித்து.

2. இவ்வாறு கூறுகின்றவன், சூனியவாதி.

3. இவ்வாறு கூறுகின்றவன், மாயாவாதி. ‘மயங்கிய வழிப் பேய்த்
  தேரிற்புனல்போலத் தோன்றி மெய்யுணர்ந்தவழிக் கயிற்றில்
  அரவுபோலக்கெடுதலின் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலால்
  கணந்தோறும் பிறந்து இறக்குமென்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார்
  பல திறத்தராவர்,’ என்ற பரிமேலழகருரை இங்கு ஒப்பு நோக்குக.

4. ஸ்ரீ விஷ்ணு. புரா. 2. 21 : 93.

5. தைத்திரீயம். 6.

6. சுருதி.