முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
146

கனன

கனன் எண்ணும்படி 1மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், 2விசாலமான கண்களையுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப்பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார். ‘ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின், அது 3‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் 4படுகாடு கிடந்தனர். கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக ‘மத்துறு கடைவெண்ணெய்’ என்பது முதலாகச் சிலவற்றைக் கூறி, ‘எத்திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள், 5‘தப்பச்செய்தோம்; அழித்துச் சூளுறவு செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம்பாட்டில். அதாவது, பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்; இப்பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி. மேல்பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

    எனிவரும் இயல்வினன் - எளிமையை இயல்பாகவுடையவன். ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்; தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை சொரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி. நிலை

 

1. இங்கு,

  ‘காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
  வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
  பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
  வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’
  
  என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.

2. ஸ்ரீராமா. சுந். 38 : 8.

3. திருவிருத்தம், 100.

4. படுகாடு கிடத்தல் - வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களையுடைய காடு
  கிடந்தாற்போன்று கிடத்தல்

5. ‘தப்பச்செய்தோம்,’ என்றது, பிறர்க்கு உபதேசம் செய்யப் புருந்தவர், அது
  செய்யாது! தாமே அனுபவித்தது.