முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
143

வதற

வதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்தபடியைச் சொல்லுகிறார்,’ என்று 1திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். களவினில்-களவு செய்யும் சமயத்தில்; களவு செய்யத் தொடங்குஞ்சமயத்திலே அகப்பட்டானாதலின், ‘களவினில்’ என்கிறார். ‘கடைகிற காலத்தில் களவு காணும்படி யாங்ஙனம்?’ எனின், கடைகிற பராக்கிலே 2நிழலிலே ஒதுங்கிச் சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான். உரவிடை யாப்புண்டு - மார்விடையில் கட்டுண்டு, உரம் - மார்பு; இடை-ஏழனுருபு. 3‘பொன் பெயரோன் தனது உரம் பிளந்து’ என்ற இடத்து ‘உரம்’ இப்பொருட்டு ஆதல் காண்க. ‘பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வையன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார், ‘உரவிடையாப்புண்டு’ என்கிறார்: இனி, இதற்கு ‘மிடுக்கையுடைய இடபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம். உரம் - மிடுக்கு; விடை - இடபம். இனி, உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று பொருள் கூறலும் ஒன்று. உதரம் - வயிறு. பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்? 4‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று உறுக்கிவிட்டால் போகமாட்டாதே இருந்தான் என்றபடி. ‘ஆயின், வரம்பில் ஆற்றலையுடைய இறைவனை ‘வல்லையாகில் போய்க் காணாய்’ என்கைக்கு அடி எது?’ எனின், 5‘இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள். எல்லாவற்றுக்கும் காரணமான தான்

 

1. இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்கியானம் அருளிச்செய்தவர்;
  திருமலை நம்பியின் புதல்வர்; இராமாநுசருக்கு அம்மான் சேயும்
  மாணாக்கரும் ஆவர்.

2. ‘நிழலிலே ஒதுங்கி’ என்றது, வைகறையில் விளக்கு ஏற்றி வைத்துத் தயிர்
  கடைவார்கள் ஆகையாலே, அவ்விளக்கு நிழலிலே ஒதுங்கி என்றபடி.

3. பெரிய திருமொழி, 4. 2 : 7.

4. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 14-15.

5. ஸ்வேதாஸ்வதரம்