முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
147

வரம

வரம்பு இல - இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை; ‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டுக. இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு, ‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர். அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. தேர்ப்பாகனாய்த் தாழ் நிற்கச்செய்தே 1ஸ்ரீவிஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின்பொருட்டுப் போகாநிற்கச்செய்தே கண்டாகர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை. இத்தாற்பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

    பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2‘பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் 3பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், 4‘பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார். ‘ஆயின், பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், 5‘என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், 6நான் உங்கட்குச் சுற்றத்தவனாய்ப் பிறந்திருக்கிறேன்,’ என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும். ஒளிவரும் முழுநலம்-நீங்கின தீவினைகளையுடைத்தாய் இருத்தல்

 

1. விஸ்வரூபம் - உலகமே உருவமாயிருக்கும் வடிவம்

2. ஸ்ரீ கீதை, 18 : 55.

3. யஜூர்வேதம்.

4. திருவாய்மொழி. 1. 3 : 2.

5. ஸ்ரீராமா. யுத். 120 : 11.

6. “நான் தேவன் அலன், கந்தருவன் அலன், இயக்கன் அலன் அசுரனும்
  அலன். நான் உங்களுக்குச் சுற்றத்தானாய்த் தோன்றியிருக்கிறேன்; இப்படித்
  தோன்றியிருப்பதனால் வேறு விதமாக நினைக்கத்தக்கவன் அல்லன்,”
  என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம். (5. 13 : 12.)