முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
153

New Page 1

முயற்சியால் காணும் அன்று ‘இன்ன படிப்பட்டு இருப்பது ஒரு தன்மையையுடையவன்’ என்று அறிய ஒண்ணாத என் சுவாமியானவன். யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளில் ஓர் அளவும் இல்லையேயாகிலும் தானே காட்டக் காணுமவர்களுக்குத் தன் படிகள் எல்லாம் அறியலாம்படி இருப்பன். ‘எங்கே கண்டோம்?’ என்னில், 1ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே! இங்கு ‘யாரும்’ என்ற உம்மை தாழ்ச்சிக்கு எல்லையிலே நிற்கிறது. ‘எம்பெருமான்’ என்ற சொல்லால், ‘அடியார்க்கு எளியனாய் அடியர் அல்லாதார்க்கு அரியனான என் 2நாயன் நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார். 3‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற உனக்கு வணக்கம் வணக்கம்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

    பேரும் ஓர் ஆயிரம் - அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை. குணம் பற்றி வருவனவும், சொரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். 4‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ எனப் புகலும் பாரதம். பிற பல உடைய எம்பெருமான்-அப்பெயர்களின் மூலமாகக் காண்கின்ற பல திருமேனிகளையுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது. ‘ஆயின், ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், 5‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். 6‘பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது 7திருமேனியைக்

 

1. குரங்கு-சுக்கிரீவன்; திருவடியும் ஆம். வேடச்சி-சபரி;
     ஆய்ச்சி-யசோதைப் பிராட்டி.

2. நாயன்-ஏவுகின்றவன்; தலைவன்.

3. ஸ்தோத்திர ரத்தினம், 21.

4. பாரதம்.

5. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 6.

6. சாந். உப. 6 : 3.

7. சார்பினால் கோடல் தகும்; ‘வினை சார்பு இனம் இடம் மேவி விளங்காப்
  பலபொருளொருசொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே’ என்பது நன்னூல் (390).