முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
162

New Page 1

‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப்பாசுரத்தில் விசேடம்.

    ஒன்று என பல என அறிவு அருவடிவினுள் நின்ற - ‘மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே நிலைபெற்றுநிற்கிறானோ, அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலைபெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளையுடையராய் நிற்கிற. இனி, ‘ஓர் ஆத்துமாவின் நிலைபேறோ, பல ஆத்துமாக்களின் நிலைபேறோ? என்று அறிய அரிதான தன்மையினையுடையராய் நின்ற என்னுதல். நன்று எழில் நாரணன் - ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய 1நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், 2‘நீங்கின குற்றங்களையுடையவனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, 3‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, ‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம். திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின், ‘நாரணன்’ என்கிறார். நான்முகன் - ஒருவன், படைக்குங் காலம் வந்தால் நான்கு வேதங்களையும் சொல்லுதற்கு நாலுமுகத்தையுடையனாய்ப் படைக்குந் தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன். அரன் - ஒருவன் அழிக்குந்தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன்.

    என்னும் இவரை - இப்படி வேறுபட்ட தன்மையராய் இருக்கும் இவர்களை. 4‘படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன் என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’ என்கிறபடியே, பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன

 

1. நாராயண அநுவாகம் - உபநிடதத்தின் கூறு. ‘நன்று’ என்பது, உபநிடதத்திற்கு
  ஆகுபெயர்.

2. சுபால உபநிடதம்.

3. திருவாய். 4. 5 : 10.

4. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 23.