முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
166

அப

அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன; ஆச்சரியம்,’ என்றும், 1பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,’ என்றும் வருகின்ற பிரமாணங்களை அறிக.

    ஓர் குறைவு இல்லை - ‘மேல் ஒரு குறையும் வாராது. இனி, விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம் 2‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்; நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ என்பது பகவான் திருவாக்கு. 3‘தீய ஒழுக்கமுடைமை, உண்ணத் தகாதனவற்றை உண்டல், நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல், வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன் ‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின், பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில், இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும், 4‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ என்றும் கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

    ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு; மனன் அகம் மலம் அறக் கழுவி - சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து, ‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும். ‘ஆயின், ஏனைய தேவர்களை இறையவர்களாக எண்ணுதல் கூடாதோ?’ எனின், 5‘திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்’ என்கையாலே, அவ்வாறு எண்ணல் பழுதாம். நாளும்-பருவம்

 

1. விஷ்ணு தர்மம். 78.

2. ஸ்ரீ கீதை, 9 : 81.

3. பாரதம் சாந்தி பர்வம்.

4. பாரதம் அநுசாசன பர்வம்.

5. ‘திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்
  - இறைஞ்சியும், சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனுந்தன், தூதுவரைக்
  கூவிச் செவிக்கு,’ என்பது, நான்முகன் திருவந்தாதி. 68.