முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
169

வந

வந்து பிறப்பன்,’ என்று அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம். ‘ஆயின், பொல்லாரைப் பொன்றுநெறி போக்கல் யாது பற்றி?’ எனின், ‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்; அதனை ஓர்க.

    வலத்தனன் திரிபுரம் எரித்தவன் - ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார். முப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன். 1‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர் பதினொருவரையும் பார்ப்பாய்,’ என்பது மோட்ச தர்மம். ஏழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து - எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித் திருநாபிக் கமலத்தில் இருப்பான். ‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர். 2‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று. இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான காத்தலுக்கும் உபலக்ஷணம். எழுச்சியாவது, பதினான்கு உலகங்கட்கும் தலைவனாய் இருக்கிற செல்வம். இறைவன் விரும்பி வந்து அவதரிக்கையாலே ‘நல்லுலகம்’ என்கிறார். 3‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனிஉடம்பன்’ என்கிறபடியே, பிராட்டிக்கும் பிரமன் முதலியோர்க்கும் சமமாகத் திருமேனியில் இடங்கொடுத்து வைத்தால், அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாதபடி கூறாகக் கொடுத்து வைத்தானாதலின், ‘இடம் பெற’ என்கிறார். ‘ஆயின், இவர்கட்குத் திருமேனியைக் கூறாகக் கொடுப்பான் என்?’ என்னில், இறைவனுடைய திருமேனி எல்லார்க்கும் பற்றுக்கோடாய் இருத்தலால் என்க. பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று, பிரமனும் திருநாபிக்கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.

 

1. மோக்ஷ தர்மம், 36, 11.
2. ஸ்ரீ கீதை, 11 : 15.
3. திருவாய்மொழி, 4. 8 : 1.