முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
174

பாராமல் தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார். 2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க. அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-3‘மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் - செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து - வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

(10)

33

        அமரர்கள் தொழுதுஎழ அலைகடல்
            கடைந்தவன் தன்னை
        அமர்பொழில் வளங்குரு கூர்ச்சட
            கோபன்குற் றேவல்கள்
        அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள்
            இவைபத்தும் வல்லார்
        அமரரோடு உயர்விற்சென்று அறுவர்தம்
            பிறவிஅஞ் சிறையே.


    பொ-ரை :
இந்திரன் முதலான தேவர்கள் வணங்கி எழ, அலைகளையுடைய கடலைக் கடைந்தவனை, பொருந்திய சோலைகள் சூழ்ந்த ஞான வளப்பத்தையுடைய திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார், அண்மையிலிருந்து செய்த சொல் தொண்டாகிய, பொருந்திய சுவையையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களைப் பொருள் நுணுக்கங்களோடு கற்று வல்லவர்கள், நித்தியசூரிகளைப் போன்று உயர்விலே சென்று தமது பிறவியாகிற கொடிய சிறை நீங்கப் பெறுவர்.

 

1. திருவாய். 9,2 : 2.
2. ஸ்தோத்திர ரத்தினம், 31.
3. ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 2.