முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
286

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘சர்வேஸ்வரனை அடைந்து சிறிய பயனைக் கொண்டு போவதே!’ என்று கேவலனை நிந்தித்தார்; அவன்தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படியை அருளிச்செய்கிறார் இப்பாசுரத்தில்.

    வைப்பாம் - ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், 1பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் - ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் 2உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தியோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச்செய்தார் ஆவர். 4‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத் தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி. ‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில், அடியரை-5‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு, இனி, 6இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி அவன் 7படிவிடப் பிழைக்கின் அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம். வல்வினை துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-வலிய வினைகளிலே கொண்டுபோய் மூட்டுகைக்கு ஈடான வலிய இந்திரியங்கள் ஐந்தாலும் துஞ்சக்கொடான். இனி, புலன் ஐந்தும்

 

1. பிராப்யத்துவம் - அடையத்தக்க பொருளின் தன்மை.

2. உண்டறுத்தல் - ஜீர்ணமாக்கிக்கோடல்.

3. பிராபகத்துவம்-(பகவானை அடைவதற்குரிய) வழியின் தன்மை.

4. வடமொழி மறை.

5. ஸ்ரீராமா. யுத்.

6. ‘அடியர்’ என்பதற்குத் துவேக்ஷம் இன்மையையுடையவரென்றும், அநந்யப்
  பிரயோஜநர் என்றும் இருபொருள் அருளிச்செய்கிறார்.

7. ‘படி விட’ என்பது சிலேடை; படி-திருமேனியும், ஜீவனமும்.