முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
179

பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்த பொருள் அதற்கு அடுத்த இத்திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும். ‘அனுபவிக்கிறார்’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்த பொருள், இவ்வாழ்வாருக்கு 1‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம். ‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின், மேல் திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப்பட்டுக் கட்டிக்கொண்டார்; அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

    ‘ஆயின், 2‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று, மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்; பெயர நிற்கவே, இவர் கலங்கினார். ‘ஆயின், இறைவன் மருத்துவனோ?’ எனின், 3‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ எனப்படுதலால் மருத்துவனேயாம். ‘நன்று; ஞான தேசிகரான இவர் கலங்கலாமோ?’ எனின், ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்; ‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார். மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும் பிரிவில் 4அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது? 5‘அவர் வந்து என்னை மீட்டுச்

 

1. திருவாய். 10. 10 : 1.

2. ஸ்ரீ ராமா. யுத். 18 : 28. ஆர்த்தன் - பேறு பெறுவதற்கு விரைகின்றவன்.
  திருப்தன் - ‘பெறுகின்ற காலத்தில் பெறுவோம்,’ என்று இருப்பவன்.
  ஆர்த்தன் - அமிதவாதி. திருப்தன் - மிதவாதி.

3. பெரியாழ்வார் திருமொழி, 5. 3 : 6.

4. அகிஞ்சித்கரம் - பயனற்றுப்போதல்.

5. ஸ்ரீராமா. சுந். 9 : 30.