முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
196

நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின், 1‘கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்; அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்; ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது. ஒருத்தி-‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ? அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை 2ஏவுடனே கிடந்து உழையாநின்றது’ என்று ஊரில் வார்த்தையானால் எய்தவன் கை உணராதோ? ‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே? அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது மேலும் மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமேயாவள். ‘ஏன்? அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின், சம்சாரிகள் புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்; நித்தியசூரிகளுக்குப் பிரிவு இல்லை; 3மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு உறுப்புகளாய் இருப்பவர்கள்.

    மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு 4‘என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; 5அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?

 

1. ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 21, 22.

2. ஏவுடனே - பாணத்தோடு.

3. பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கையாழ்வார் பேயாழ்வார்களைத்
  திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமாகவும்,
  திருமழிசைப்பிரானைக் கண்டமாகவும், குலசேகராழ்வார்
  திருப்பாணாழ்வார்களைத் திருக்கரங்களாகவும்,
  தொண்டரடிப்பொடியாழ்வாரைத் திருமார்பாகவும், திருமங்கை மன்னனைத்
  திருநாபியாகவும், மதுரகவிகளையும் எம்பெருமானாரையும் திருவடிகளாகவும்
  பெரியோர் அருளிச்செய்வார்.

4. ஸ்ரீராமா. சுந். 9 : 30.

5. ‘அறிவு தந்தார் தாமன்றோ?’ என்றது, ‘பத்தியின் நிலையினையடைந்த
  ஞானத்தையன்றோ தந்தார்?’ என்றபடி.