முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
188

New Page 1

    பொ-ரை : கூட்டமாக இருக்கின்ற குயில்காள்! நீங்கள் அல்லீரோ? என்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய பெருமானிடத்தில் எனக்குத் தூதாகிச் சென்று, நான் கூறுவதனைக் கூறின் குற்றம் யாது உண்டாம்? முற்பிறவிகளிற் செய்த நிறைந்த பாவங்களால் திருவடிகளில் அண்மையிலிருந்து செய்யுந் தொண்டுகளைச் செய்வதற்கு முற்பிறவியிலேயே முயலாத யான் இன்னமும் அகன்று போமதுவோ முறை?’

    வி-கு : மேல் திருப்பாட்டில் ‘என்’ என்பதற்கும் இங்கு ‘என் என்பதற்கும் உள்ள பொருள் நயம் உணர்தல் தகும். பெருமானார்க்கு-வேற்றுமை மயக்கம். ‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’ (திருக்குற. 763) என்புழிப் போன்று, ஈண்டு ‘உரைத்தக்கால்’ என்பது வினையெச்சம். திருவடிக்கீழ்-என்பதில் ‘கீழ்’ என்பது ஏழனுருபு. முயலாதேன், பெயர். ‘தாமரைக்கண் பெருமான்’ என்றவிடத்துத் ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்னுங்குறள் நினைவு கூர்தல் தகும்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் மேல்; அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு: 1‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ என்கிறபடியே வந்து விழுந்தது. ‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமையின்றி ஒழியுமே, இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் மேம்பட்ட இறைவனுக்கு 2நமஸ்காரமாமித்தனை அன்றோ?

    என் பெருமான்-பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படிகாணும் கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி. அன்றி, பிரிகிற காலத்தில் தான்

 

1. ‘உலகத்தில் உன் முகத்தைப் போன்றதொரு முகத்தை ஓரிடத்திலும் நான்
  பார்த்ததில்லை என்று ஆசையால் யான் கூற, கேட்ட அவள் ‘அரி அரி’
  என்று கூறிக்கொண்டு, கோபித்தவள் ஆனாள்; ஆதலால், தொடங்கியது
  ஒன்று, முடிந்தது வேறு ஒன்று என்று தன் நண்பனுக்குச் சொன்னான்’
  என்பது, சுலோகத்தின் பொருள். இவ்விடத்தில்,

  ‘யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
  யாரினும் யாரினும் என்று.’

(1314)

  என்ற குறளை ஒப்பு நோக்குக.

2. நமஸ்காரம், பெருமைக்குக் குறைவு.