முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
199

இன

    இனி, ‘என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணா’ என்பதற்கு, ‘இவ்வளவிலே என்னை வந்து அணைந்தவராய் என் நிலையைக் கண்டு இதற்கு ஒரு போக்கடி பாராமல், உங்கள் பக்கல் கேட்டு அறிய இருக்கிறவர்க்கு’ என்று உரைத்தலுமாம். அவனை அனுபவிக்குமதிலும், அவனைப் பிரிந்து நோவுபடுகின்ற தன் தன்மையைக் கட்டிக்கொண்டு கிடத்தல் அமைந்ததாக இருத்தலின், ‘என் நீர்மை’ என்கிறான். தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள். ‘முதன்முதலில் வடிவைக் காட்டியே என்னைத் தமக்கே உரிமையாக்கினார்; அவ்வடிவிற் புகர் இப்பொழுது அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லையே’ என்பாள், ‘என் நீல வண்ணர்க்கு’ என்கிறாள். ‘ஆயின், மனத்தில் தண்ணளி இல்லையோ?’ எனின், 1‘யாமுடை ஆயன்தன் மனங்கல்லாலோ’ என்று இவள் தானே மேல் கூறுவள். ‘என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்குச் சொல்லி விடுவேன்’ என்பாள், ‘என் சொல்லி யான் சொல்லுகேனோ?’ என்கிறாள். ‘ஆயினும், நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன, ‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்? 2‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’ கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய், பின்னையும் ஆசையின் மிகுதியினாலே, 3‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:

    நல் நீர்மை-நல் உயிர். இனி-ஆன அளவும் 4கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள். அவர்கண் தங்காது-சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது, பிராட்டி,

 

1. திருவாய். 9. 9 : 5.

2. ‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ’ என்றது,
  பிரதானனான அரசன் ஓலையை மறுத்தவன், கணக்கன் ஓலை கேட்கப்
  போகின்றானோ?’ என்றபடி.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.

4. கால் கட்டிப்பார்த்தல்-சிலேடை; போகின்றவர்களைத் தடுத்தல்: காற்றினைக்
  கட்டுதல்.