முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
206

யாலே அருள் 1குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம். ‘அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது; அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது; அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.

    அவர் ஆவி துவரா முன் அவளுடைய உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும். இனி, 2‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால், அவள், உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம். 3‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. 4வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள். கடவீர் - ‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும் தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே 5பிசுகிச் சுழியாநிற்கும் ஆதலின், அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில், அவர்வீதி - அவள் தெருவிலே. ‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில், ஒரு நாள்-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.

 

1. குமரியிருத்தல் - அனுபவயோக்கியமின்றி இருத்தல்.

2. ‘அவராவி துவராமுன் அருளி’ என்று கூட்டி, ‘அருளாத நீர்’ என்றதனுடைய
  முன்னைய பொருளுக்குச் சேர அருளிச்செய்கிறார் ‘பின்னையும்’ என்று
  தொடங்கும் வாக்கியத்தால்.

3. ஸ்ரீராமா. சுந். 3 : 10. இது, முன்னே அருள வேண்டும் என்பதற்கு
  மேற்கோள்.

4. திருவாய். 1. 4 : 1.

5. பிசுகிச்சுழித்தல்-மந்தமாக வளைய வருதல். வடிம்பாலே தாக்கி-தேர்
  முதலியவற்றைக் கிளப்பும் தணி மரத்தாலே குத்தி.