முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
276

New Page 1

‘வெறும் அவன் படியையோ பார்ப்பது! அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ? 1‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்பவர் அன்றோ அருகில் இருக்கிறார்?’ என்கிறார்.

    தருமம் - இப்பொருளில் ஐயம் இன்று. அவ்வரும்பயனாய - பெறுதற்கு அரிதாகச் சாத்திரங்களிலே பிரசித்தமான பிரயோஜன ரூபமானவற்றை. இனி, ‘பயனாய’ என்பதனை வினையாலணையும் பெயராகக் கொள்ளாது, பெயரெச்சமாகக் கொண்டு, திருமகளுக்கு அடைமொழியாக்கி, தருமத்தினுடைய மேலான பிரயோஜனந்தான் ஒருவடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற பெரிய பிராட்டியார் என்று பொருள் கூறலும் ஒன்று. திருமகளார் தனிக்கேள்வன் - பெரிய பிராட்டியாருக்குக் கணவன் ஆகையாலே 2இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன். 3சனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்? அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே. திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்’ என்கிறார். பெருமையுடைய பிரானார் - இலட்சுமிபதி ஆகையாலே வந்த மேன்மையுடைய உபகாரகர் ஆனவர். அடியார்கட்கு அருள் புரிதலே சொரூபமாகவுடையவர் ஆதலின், ‘பிரானார்’ என்கிறார். இருமை வினை கடிவார்-4பேர்வாசியேயாம்படி நாம் செய்து வைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். நல்வினை தீவினைகட்குத் தம்மில் தாம் வேற்றுமை உண்டேயாயினும், 5மோட்சத்திற்குத் தடை என்னும் தன்மையில் இரண்டு வினைகளும் ஒக்கும் ஆதலின், ‘இருமை வினை கடிவார்’ என்கிறார்.

(9)

 

1. ஸ்ரீராமா. யுத். 116 : 45.

2. ‘அதிரதர் தம்மை எண்ணில் அணிவிரல் முடக்கல் ஒட்டா முதிர்சிலை
  முனியும்’ (வில்லிபா. நிரைமீ. 92) ‘வில்லாளரை எண்ணில் விரற்கு முன்
  நிற்கும் வீரன்’ (கம். யுத். 1956.) என்பன இப்பொருள் பற்றி வந்தன.

3. ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.

4. ‘பேர் வாசியேயாம்படி’ என்றது - புண்ணியம், பாவம் என்கிற பேர்வாசி
  மாத்திரமேயாம்படி என்றவாறு.

5. ‘நல்வினையும் பிறவிக்குக் காரணமாதலின், ‘இருவினையும் சேரா’ என்றார்,’
  என்ற பரிமேலழகருரை இங்கு ஒப்பு நோக்குக.