முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
329

New Page 1

குலத்தில் அவதரித்த நப்பின்னைப்பிராட்டியாரும் என்னும் இவர் மூவருமாவர்; ஆளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாகும்; அவ்வுலகங்களை எல்லாம் ஒருசேர ஒரே காலத்தில் விழுங்கி ஆலந்தளிரில் சேர்ந்து தங்கியிருந்தவன்; எனக்குத் தலைவன்; கடலைக்காட்டிலும் மிகப் பரந்த வியக்கத்தக்க குணங்களையும் செயல்களையுமுடையவன்; கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் ஆன இறைவன் என் மருங்கிலே தங்கியிருக்கின்றவன் ஆனான்.

    வி-கு : ‘இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவிதனக்கு இறைவன், தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை’ (பெரியதிரு. 2. 3 : 5); ‘ஆய்மகள் பின்னையாம் என்றாள்’ (சிலப். ஆய்ச்.); ‘நிலமகட்குக் கேள்வனும் நீணிரை நப்பின்னை, இல வலர்வாய் இன்னமிர்தம் எந்தினான் அன்றே?’ (சிந். 482) என்பன ஈண்டு நினைவு கூர்க. ஒக்கலை - இடுப்பு, ‘ஒக்கலை வேண்டி அழல்’ (பழமொ. 220) என்ற இடத்தும் ‘ஒக்கலை’ என்பது இப்பொருட்டாதல் காண்க.

    ஈடு : நான்காம் பாட்டு. 1மேன்மை அது, அகடித கடநா சாமர்த்தியம் அது : இப்படி இருக்கிறவன், யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமாறு போன்று என் மருங்கிலே வந்திருக்கை தனக்குப் பெறாப் பேறாக நிளைத்திருக்கின்றான் என்கிறார்.

    உடன் அமர் காதல் மகளிர்-உடனே அமரவேண்டும்படியான காதலையுடைய பிராட்டிமார். 2‘அகலகில்லேன் இறையும்’ என்று இருப்பவர்கள் ஆதலின், ‘உடன் அமர் காதல் மகளிர்’ என்கிறார். ‘அவர் யாவர்?’ என்னில், திருமகள்-சர்வேஸ்வரனுக்குப் பிரதான மனைவியாய்ப் பட்டத்துக்கு உரியவளாய், 3‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்று இருக்கும் பெரிய பிராட்டியார். மண்மகள்-‘குற்றம் பார்க்கக்கடவதோ?’ என்று முதலிலேயே அவனுக்குப் பொறைக்கு 4உவாத்தாய்ப் பொறை விளையும்படியான ஸ்ரீபூமிப் பிராட்டி. ஆயர் மடமகள்-அனுபவ சுகம் தானாய், தன் வடிவழகாலே துவக்கித் திருவுள்ளத்தில் குற்றம் படாதபடி இருக்கும் நப்பின்னைப் பிராட்டி. இனி, திருமகள் - அவன் ஐஸ்வரியம். மண்மகள் - அது

 

1. ஆலிலைச் சேர்ந்தவன் ஒக்கலையானே,' என்ற பதங்களை நோக்கி
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திருவாய். 6. 10 : 10.

3. ஸ்ரீராமா. யுத் 116 : 45.

4. உவாத்தாய் - உபாத்தியாயையாய்; 'அரசன் உவாத்தியான் தாய் தந்தை
  தம்முன்' என்பது ஆசாரக்கோவை.