முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
216

கிற்று. 1‘நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள். ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய், எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே எல்லாவகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி. ‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் சொரூபலாபம் ஒழிய இறைவனுக்கு இத்தொண்டுகளால் பயன் இல்லையாதலின், அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின், அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் சொரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ சொரூபசித்தி?

    இப்படியிருக்க, வீடு ஆடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ-நல்வினை இல்லாத காரணத்தால் பிரிவிலே மூழ்கித் தம்மைப் பிரிந்திருக்கிற இப்பொல்லாத இருப்பு உண்டு; இது 2என் செய்யக் கடவதோ! வீடு-விடுகை; அதாவது, பிரிதல், ஆடுகை-மூழ்கியிருத்தல். வீற்றிருக்கையாவது, பிரிவிலே முடி சூடியிருத்தல். வினையறுகை-நல்வினை அறுகை. இனி, இத்தொடர்மொழிக்கு, 3‘தம்மையும் பிரிந்து, தம்மோடு ஒரு சம்பந்தத்தை இட்டுச் சுற்றத்தார்களும் கைவிட, அவர்களையும் விட்டு, வேறுபட்டிருக்கிற இவ்வுயிர் என் செய்யக் கடவதோ!’ என்று பொருள் கூறலுமாம். 4‘எமராலும் பழிப்புண்டு இங்கு என்? தம்மால் இழிப்புண்டு, தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே,’ என்பர் மேல்.

 

1. ஸ்ரீராமா. அயோத். 40 : 5.

2. என் செய்யக்கடவதோ-‘பிரிவை முடிவாகக் கொண்டதோ, அல்லது,
  இறத்தலை முடிவாகக் கொண்டதோ?’ என்றபடி.

3. ‘வீடு ஆடி வீற்றிருத்தல் வினை அற்றது’ என்பதற்கு, இது பொருள்
  அருளிச்செய்கிறார். முதற்பொருளுக்கு, ‘வினையற்ற காரணத்தால் வீடாடி
  வீற்றிருத்தல்’ என்று கூட்டுக. இரண்டாம் பொருளுக்கு, ‘வீராடி இருப்பதாய்,
  வீற்றிருத்தலையுடையதாய் இருக்கிற வினையற்றது, என்று கூட்டுக. இங்கு
  வீற்றிருத்தல் - வேறுபடவிருத்தல். ‘வீடாடி’ என்றதற்கு - உறவினர்
  பிரிவையும் உபலக்ஷணத்தாற்கோடல் வேண்டும். வினையற்றது-நல்வினையற்ற
  உயிர்ப்பொருள்.

4. திருவாய். 9. 7 : 2. இது, அவனைப் பிரிந்திருக்கும் நிலையில் அவனுடைய
  சம்பந்தமே காரணமாக உறவினர்களும் கைவிடுகைக்கு மேற்கோள்.