முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
219

1ச

1சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு? இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, 2‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும் ஆம். ஆழி மடம் நெஞ்சே-ஞானத்தினையுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று. வினையோம் ஒன்றாம் அளவும் விடல்-படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

(10)

 44

        அளவியன்ற ஏழ்உலகத் தவர்பெருமான் கண்ணனை
        வளயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
        அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
        வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.


    பொ-ரை :
அளவினைக் கடந்த ஏழுவகையான உலகத்தில் உள்ளவர்கட்குப் பெருமானாகிய கண்ணபிரானை, வளப்பம் பொருந்திய வயல்களாற் சூழப்பட்ட அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் மனம் பொருந்தி அருளிச்செய்த, பெருமையின் எல்லையைக் கடந்த அந்தாதியான ஆயிரந்திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களின் வளப்பம் பொருந்திய சொற்களால் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டில் சென்று செய்யப்படும் மிக உயர்ந்த தொண்டினைப் பெறலாகும்.

    வி-கு : ‘அளவியன்ற பெருமான், ஏழுலகத்தவர் பெருமான்’ எனக் கூட்டுக. அந்தாதி-ஒரு செய்யுளில் அந்தமாய் நிற்கும் எழுத்து அசை சீர் அடி என்பன அடுத்த செய்யுளின் ஆதியிலே நிற்பது; அந்தம்-முடிவு. ஆதி-முதல்.

 

1. ஸ்ரீராமா. யுத். 5 : 9.
2. ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.