முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
220

    ஈடு : முடிவில், இத்திருவாய்மொழியில் 1‘சொற்களை மாத்திரம் கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

    அளவியன்ற - அளவைக் கடந்திருக்கின்ற; அளவு அற்ற பெருமையினையுடையவன் என்றபடி. இத்தால், இந்நிலையிலே முகங்காட்டுகைக்கு ஈடான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவன் என்கை. ‘வியந்த’ என்பது ‘வியன்ற’ என விகாரப்பட்டது. வியத்தல் - கடத்தல். ஏழ் உலகத்தவர் பெருமான் - நாராயணன் என்ற திருப்பெயர்க்குக் குறைவு வாராதபடி ஸர்வேஸ்வரன் ஆனான். ‘ஆயின், ‘ஏழ் உலகத்தவர்’ என்றால், தம்மைச் சொல்லியது ஆகுமோ?’ எனின், ஏழ் உலகத்தவர் எனவே, தாமும் அதில் அடங்கியவரேயாவர். 2கண்ணனை - இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே அடியார்க்கு எளியவன் ஆனான். இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் கிருஷ்ணன் என்னவும் ஆம். 3இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்பியமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

    வளம் வயல் - 4‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ என்கிறபடியே, திருநகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று. வாய்ந்து

 

1. ‘சொற்களை மாத்திரம் கற்றலே அமையும்’ என்றது, ‘இப்பத்தின்
  வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே,’ என்றதனை
  நோக்கியது.

2. ‘கண்ணன்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள்,
  கண்ணுக்கு விஷயமானான் என்பது; இப்பொருளில், குறிப்பு
  வினையாலணையும் பெயர்; இரண்டாவது பொருளில் பெயர்ச்சொல்.

  ‘வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற
  மாதரார் கண்க ளூடே வாவுமான் தேரிற் செல்வான்
  யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணன் என்றே
  ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுள் கண்ணன் என்பதற்குக் கூறிய முதற்
  பொருளோடு ஒரு சார் ஒப்புடையது.

3. இத்தால் - ‘அளவியன்ற ஏழுலகத்தவர் பெருமான் கண்ணனை’ என்ற
  இதனால், ‘அளவியன்ற ஏழுலகத்தவர் பெருமான்’ என்றதனால் மேன்மையும்,
  ‘கண்ணனை’ என்றதனால் எளிமையும் பெறப்படும்.

4. ஸ்ரீராமா. யுத். 127, 17.