முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
230

அடைமொழியாக்கலும் ஆம். அவ்வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், 1உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்? எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல். ‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே? ஆதலால், பெண் கோடலே பயன். 2‘வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’ என்றார் கூரத்தாழ்வானும். இத்தால் - ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப்பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி இனி, 3‘தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்; கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே, ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும், எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்’ எனலும் ஒன்று.

    இளஏறு ஏழும் தழுவிய - யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் 4ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர்

 

1. நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
  நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
  காய்ந்தது எனினுந் தலையொழிந்து ஆடாரே
  ஆய்ந்த அறிவி னவர்.

(ஆசாரக் கோவை)

  என்பதனால், தலை இருக்க உடம்பு குளித்தல் முதலிய வழக்கங்கள்
  பெறப்படும், ‘கார்த்திகை புதியதற்குக் குளித்தார்கள் ஆகில்’ என்றது,
  எல்லாரும் கார்த்திகைக்குக் குளிப்பார்கள்; புதுநெல் வரும்போது மங்கள
  ஸ்நானம் செய்து இஷ்ட தெய்வங்கட்குப் பொங்கலிட்டு உறவினரும்
  தாங்களும் உண்ணுவார்கள்; அவற்றைத் தெரிவித்தபடி. இதனைப் ‘புதிர்
  சமைத்தல்’ என்று வழங்குவர். ‘புனத்தினை கிள்ளிப் புது அவி காட்டி உன்
  பொன் அடி வாழ்க என்று, இனக்குறவர் புதியது உண்ணும் எழில்
  மாலிருஞ்சோலை எந்தாய்’ என்ற பெரியாழ்வார் திருமொழி இங்கு
  நோக்கல் தகும்.

2. சுத்தரபாஹூ ஸ்தவம், 7.

3. ஸ்ரீராமா. சுந் 16 : 5.

4. ஊட்டி-குரல்வளை; அதாவது, கழுத்து. ஏழ் எருதுகள் கழுத்துகளையும்
  ஒன்றாகக் கூட்டித் தழுவினான் என்றபடி.