முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
240

    சிவன் இவர்களோடு கூடியிருப்பின் தனக்கும் அவர்கட்கும் வேற்றுமை இன்றித் தனது உயர்விற்குக் குறைவு வாராதோ?’ என்னில், இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 1தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய - என்று கூறலும் ஆம். 2‘இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிடதமும்.

   
வானோர் பலரும் - தேவர் பலரையும், முனிவரும் - சனகன் முதலானவர்களையும், மற்றும் - நிலையியற்பொருள்களையும், மற்றும் - இயங்கியற்பொருள்களையும், முற்றும் ஆய் - ஆகச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்காக, தானோர் பெருநீர் தன்னுள்ளே தோன்றி அதனுள் கண்வளரும்-இப்படிப் படைத்தலில் நோக்கமுடைய தான், தனக்குக் கண்வளர்ந்தருளுகைக்குத் தகுதியாகப் பரப்பையுடைத்தான ஒரு சமுத்திரத்தைத் தன் பக்கல் நின்றும் உண்டாக்கி அதனுட்கண்வளரும். ‘இப்படிச் சமுத்திரத்தில் தனியே சாய்ந்தருளுகின்றவன்தான் யார்?’ என்னில், வானோர் பெருமான்-நித்தியசூரிகட்கு நாதன் ஆனவன்; மாமாயன் - ஆச்சரியங்களான குணங்களையும் செயல்களையுமுடையவன்; வைகுந்தன் - ஸ்ரீவைகுண்டத்தைக் கொலு வீற்றிருக்கும் இடமாகவுடையவன்

 

1. ‘முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
  தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
  நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
  என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’

  என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கிக் கூறிய கூற்று ஈண்டு
  நினைக்கத் தகும். வில்லி பா. 13-ஆம் போர். 220.

2. நாராயண அநுவாகம்.