முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
244

கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம் இனி, 1சாந்து கொடுத்த கூனிதன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டுவில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று. ‘தெறித்தாய், நிமிர்த்தாய்’ என்றபடி. ‘ஆயின், கிருஷ்ணனுக்கு வில் உண்டோ?’ என்னில், 2வேலிக்கோல் வெட்டி விளையாட்டு வில் ஏற்றித் திரியுமவன் அன்றோ கிருஷ்ணன்? 3‘தருமம் அறியாக் குறும்பனைத் தன்கைச் சார்ங்க மதுவேபோல்’ என்று வில் உண்டாகவே அருளிச்செய்து வைத்தாள் அன்றே ஸ்ரீ ஆண்டாள்? அவள் அருகில் இல்லாது ஒழியினும் உன்னைக் கிட்டினார்க்குத் தாழ்வு வருமோ என்கிறார் இதனால். கோவிந்தா-விலங்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ?

    வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று 4திரிபாத்விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், 5‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார். மதுசூதா-மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று என் விரோதியைப் போக்கினவனே! இதனால், ‘அவ்வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியைப் போக்குவாயும் நீயன்றோ?’ என்கிறார். உன் தேனே மலரும் திருப்பாதம் - ‘இவை ஒன்றும் இல்லையாயினும் அடியில் உன் இனிமையைப் பார்த்தால்தான் விடப் போமோ?’ என்கிறார். தேன் போலே இனிமையான திருவடிகள் என்றபடி. இனி, இவர் 6பெருநிலம் கடந்த நல்லடிப்போதையன்றோ ஆசைப்பட்டார்? இவர்

 

1. கூனி சந்தனம் கொடுத்தது, கிருஷ்ணாவதாரத்தில். சாந்து கொடுத்த
  கூனியின் வளைவை நிமிர்த்த சரிதத்தைப் பாகவதத்தால் உணர்க

2. பெரியாழ்வார் திருமொழி, 2. 6 : 1.

3. நாய்ச்சியார் திருமொழி, 14 : 6.

4. திரிபாத் விபூதி-பரமபதம். இவ்வுலகங்கள் எல்லாம் காற்பங்காகவும்
  அவ்வுலகம் முக்காற்பங்காகவும் இருப்பதனால் பரமபதத்தைத் ‘திரிபாத்
  விபூதி’ என்கிறார்.

5. ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.

6. திருவாய், 1. 3 : 10.