முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
245

ஆசைப்பட்டபடியே, 1‘திசைகள் எல்லாந் திருவடியால் தாயோன்’ என்று அத்திருவடிகளையே காட்டிச் சேரவிட்டான்; ‘உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 2‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே, தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க. அருளாய் சேருமாறு வினையேன் - கலத்தில் இட்டசோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக்கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருளவேண்டும். தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

(5)

50

        புனையேன் வினைதீர் மருந்தானாய்!
            விண்ணோர் தலைவா! கேசவா!
        மனைசேர் ஆயர் குலமுதலே!
            மாமா யவனே! மாதவா!
        சினைஏய் தழைய மராமரங்கள்
            ஏழும் எய்தாய்! சிரீதரா!
        இனையாய்! இனைய பெயரினாய்!
            என்று நைவன் அடியேனே.


    பொ-ரை :
தீவினைகள் வாய்ந்த என்னுடைய தீய வினைகளைப் போக்கும் மருந்தானவனே, நித்தியசூரிகள் தலைவனே, பிரமனையும் சிவனையும் உனது திருமேனியில் வைத்திருப்பவனே, மனைகளோடு மனைகள் சேர்ந்திருக்கின்ற ஆயர்பாடிக்குத் தலைவனே, மிக்க ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே, திருமகள் நாதனே, கிளைகளையுடைய தழைகள் பொருந்திய ஆச்சாமரங்கள் ஏழனையும் ஓர் அம்பினால் தொளைத்தவனே, வீரலட்சுமியைத் தரித்திருப்பவனே, இத்தன்மைகளையுடையவனே, இவற்றிற்குத் தக்க பெயர்களையுடையவனே என்று கூறிக்கொண்டே உருகுவன் அடியேன்.

    வி-கு : தீர் மருந்து - இறந்த கால வினைத்தொகை. ஆயர் குலம் - ஆயர் பாடி.

 

1. திருவாய், 1. 5 : 3.
2. விஷ்ணு சூக்தம்.