முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
263

1

    1‘பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

    2
‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்; அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று. இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். 3‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும், தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக்கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம். இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் 4அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக்கிடப்பு உண்டாயினும் 5மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

    இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

 

1. ஸ்ரீகீதை.
2. பாரதம்.
3. பாரதம், மோக்ஷ தர்மம்.
4. அபிமத விஷயம் - அன்பிற்குரிய பொருள் ; மனைவி.
5. மஹிஷீ ஸ்வேதம் - மனைவியின் வெயர்வை.