முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
265

நற

நற்குணங்களும் புகுமன்றோ? ஆகவே, ஹேயப்பிரத்தியநீகதையும் கல்யாணகுண யோகமும் அருளிச்செய்தாராயிற்று. ‘இங்ஙனம், உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்?’ என்னில், ஈசனை - ‘வகுத்த சுவாமி ஆகையாலே’ என்கிறார். புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் 1பச்சை தேடி விருந்திட்டால், ‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!’ என்று 2நெஞ்சாறலோடே தலைக்கட்டவேண்டி வரும்; மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் படவேண்டாத இருக்கலாம் அன்றே? அப்படிப்பட்ட சம்பந்தத்தைப்பற்ற ‘ஈசன்’ என்கிறார் என்றபடி.

    பாடி - சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கையின்றி, மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி. விரிவது மேவல் உறுவீர். 3‘மேற்சொல்லப்படுகின்ற சாமவேதத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே, பாடி 4விஸ்திருதர் ஆசையாகிற பேறு பெறவேண்டியிருப்பீர்! ‘பேறு கனத்து இருந்தது; நாங்கள் செய்ய வேண்டுவது என்?’ என்னில், பிரிவகை இன்றி - பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, 5‘இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால், உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக்கொண்டு அகலாமல் என்றபடி. நல் நீர் - ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘கேவலம் தண்ணீரும் அமையும்,’ என்றவாறு. தூய் - விரும்பியவாறு தூவி. புரிவதுவும் - இவன் இறைவனுக்கு அருட்கொடையாகக் கொடுக்குமதுவும். புகை பூவே - அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் 6‘செதுகையிட்டுப் புகைக்க அமையும்; கண்டகாலி இடவும் அமையும்,’ என்று அருளிச்செய்வர்.

 

1. பச்சை - சமைத்தற்குரிய உணவுப் பொருள்.
2. நெஞ்சாறல் - மனத்துன்பம்.
3. தைத்திரீ. பிரு. 10.
4. விஸ்திருதர் - விரிவையடைந்தவர்.
5. திருவாய். 1. 5 : 2.
6. செதுகை - கூளம்; பதர்.