முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
281

New Page 1

செலுத்துகின்ற என்னையடையாது, அழிவினை உண்டு பண்ணுகிற சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,’ என்றும், 1‘இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது; இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது; நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது; என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச்செய்தான். ஆக, இப்படி வழிபடுதலே தொடங்கி, மோட்சத்தை அடைதல் ஈறாக, அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்பமயமாகவே இருக்கவும், அவனை விட்டு மிகச்சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று 2கேவலரை நிந்தித்துக்கொண்டு, இதனை ஒழியில் 3தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே இவ்வழிபாட்டின் இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

67

        பிறவித் துயர்அற ஞானத்துள் நின்று
        துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
        அறவனை ஆழிப் படைஅந் தணனை
        மறவியை இன்றி மனத்துவைப் பாரே.


    பொ-ரை :
‘பிறப்பால் வருந்துன்பம் நீங்கும்படி, சாத்திரங்களால் உண்டாகும் ஞான நெறியில் நின்று, இவ்வுடலை விட்டு நீங்கி, ஞானத்தையுடையதாய்த் தனக்குத்தானே விளங்குவதாயுள்ள ஆத்துமாவின் நிலையை அடைய வேண்டும் என்று இருப்பவர்கள், தருமத்தின் உருவானவனும் சக்கரப்படையினைத் தரித்த அழகிய தண்ணளியையுடையவனுமான இறைவனைத் தாங்கள் நினைத்த பயனை மறத்தல் இன்றியே அப்பயனை அடைவதற்கு மனத்தில் வைத்துத் தியானிக்கின்றார்களே! இஃது என்னே!’ என்கிறார்.

    வி-கு : ‘அற நின்று தலைப்பெய்வார் வைப்பாரே,’ என முடிக்க. தலைப்பெய்வார் - பெயர். சுடர்விளக்கம் - உயிர். ‘ஒண்பொருள்’

 

1. ஸ்ரீகீதை, 92.

2. ‘கேவலரை நிந்தித்துக்கொண்டு’ என்றது, இத்திருவாய்மொழியில் முதல்
  திருப்பாசுரத்தை நோக்கி.

3. ‘என்னுள், இரான் எனில் பின்னை யான் ஓட்டுவேனோ?’ என்றதனை
  நோக்கித் ‘தாமுளராகாதபடி’ என்கிறார்.