முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
299

பசு

பசுமையையுடைத்தாயுள்ள மூங்கில் போன்று இருக்கின்ற தோளோடே அணைகையால் வந்த பெருமையையுடையவன். முன்னை அமரர் முழு முதலான்-1 ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன். ஆதலால், ‘தானும் கில்லான்’ என முடிக்க. எனவே, ‘நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்தியசூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ்வாத்துமாவை அகற்றப் போகாது,’ என்றபடியாம். இனி, 2‘முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே, நித்தியசூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்; நப்பின்னைப்பிராட்டி புருஷகாரம் அகற்றும்படி எங்ஙனே?’ எனலுமாம்.

(8)

75

        அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
        அமரர்க்கு அமுதுஈந்த ஆயர் கொழுந்தை
        அமர அழும்பத் துழாவிஎன் ஆவி
        அமரத் தழுவிற்று இனிஅக லும்மோ?

   
பொ-ரை : ‘நித்தியசூரிகளுடைய செயல்களுக்கு எல்லாம் காரணனாய் இருக்கின்ற தலைவனை, தேவர்கட்கு அவர்கள் விரும்பிய அமுதத்தைக் கொடுத்த ஆயர்கட்குத் தலைவனை, என்னுடைய உயிரானது கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து ஒரே பொருள் என்று கூறலாம்படி கலந்தது; ஆதலால், இனிமேல், விட்டு விலகுமோ?’ என்கிறார்.

    வி-கு : ‘துழாவி அமரத் தழுவிற்று,’ என முடிக்க. முழு என்பது, முழுதும் என்ற பொருளில் வந்தது அதாவது, எல்லாச்செயல்களுக்கும் என்றபடி. ‘முழுதுஎன் கிளவி எஞ்சாப் பொருட்டே,’ என்பது தொல்காப்பியம். அகலுமோ: ஓகாரம் எதிர்மறை.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3‘தானும் கில்லான்’ என்று கூறுதல்தான் எற்றிற்கு? ஒரே பொருள் என்னலாம்படியான இவ்வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்.

 

1. யஜூர் வேதம்.

2. ஸ்ரீராமா. சுந். 5. 11 : 32.

3. ‘அமரத் தழுவிற்று இனி அகலுமோ?’ என்றதனை நோக்கி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.