முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
301

76

76

        அகலில் அகலும் அணுகில் அணுகும்
        புகலும் அரியன் பொருஅல்லன் எம்மான்
        நிகரில் அவன்புகழ் பாடி இளைப்பிலம்
        பகலும் இரவும் படிந்து குடைந்தே.


    பொ-ரை :
உயிர்கள் அகன்று போக நினைப்பின், தானும் அகன்றே நிற்பன்; தன்னைச் சாரின், தானும் சார்ந்தே நிற்பன்; பகைவர்கள் கிட்டுதற்கும் அரியன்; அடியார்கள் தன்னைச் சார்கின்ற காலத்து ஒரு விதத் தடையும் இல்லாதவன்: இத்தன்மைகளால் எனக்குத் தலைவனாய் ஒப்பு இல்லாதவனாய் இருக்கின்ற இறைவனுடைய புகழ்களில், பகலும் இரவும் படிந்து குடைந்து, அவற்றைப் பாடிக் கொண்டு, பிரிவு இன்றியே இருப்போம்.

    வி-கு : புகல் - விருப்பம்; அது, இங்கு விருப்பத்தாலாகும் கிட்டுதலுக்கு ஆயிற்று. இளைப்பு - தளர்ச்சி ; அது, இங்குத் தளர்ச்சியால் உண்டாகும் பிரிவிற்கு ஆயிற்று, படிதல் கிட்டுதல். ‘படிந்து, குடைந்து, பாடி, இளைப்பிலம்’ எனக் கூட்டுக. இளைப்பிலம்-தனித் தன்மைப் பன்மை இறைவனுடைய புகழினை ‘நிகரில் புகழ்’ என்கிறார்; ‘தாவா விழுப்புகழ் மாயோன்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்; ‘பொருள் சேர்புகழ்’ என்றார் திருவள்ளுவனார்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘என்னோடு கலந்து எம்பெருமானுடைய நற்குணங்களைக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் அனுபவித்தாலும் மனம் நிறைவு பெற்றவன் ஆகின்றிலேன்,’ என்கிறார்.

    அகலில் அகலும்-2'விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன்தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,' என்கிற ஆசை உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும். அதாவது, 3'நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்பொழுதும் வணங்க மாட்டேன்,' என்னும் உறுதியோடே நிற்கில் முடித்துவிடுவான் என்பதாம். அணுகில் அணுகும் - தன் பக்கலில் எதிர் முகம் ஆனால், 4'இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,' என்பான். அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ

 

1. 'அவன் புகழ் படிந்து குடைந்து பாடி இளைப்பிலம்' என்றதனை நோக்கி
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீராமா. யுத். 18 : 34.

3. ஸ்ரீராமா. யுத். 36 : 11.

4. ஸ்ரீராமா. யுத். 19 : 6.