முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
302

New Page 1

‘இராம காரியம் செய்யும்படி சொல்லீர்,’ என்றான்; என்றது, விபீஷணனை அரக்கர் குலத்தானாக நினைத்தல் இன்றி, இக்ஷூவாகு குலத்தவனாகவே நினைத்து, ‘அரக்கர்களுடைய பலாபலம் சொல்லீர்’ என்றான் என்றபடி. இத்திருவாய்மொழியில் முதல் பாசுரம் ‘அகலில் அகலும்’ என்கிற இடம் சொல்லிற்று; இரண்டாம் பாசுரம் ‘அணுகில் அணுகும்’ என்கிற இடம் சொல்லிற்று. புகலும் அரியன் - உகவாதார்க்குக் கிட்ட அரியனாய் இருப்பன். அருச்சுனனும் துரியோதனனும் கூட வரச்செய்தே, அருச்சுனனுக்குத் தன்னைக் கொடுத்து, துரியோதனனுக்குப் பங்களத்தைக் கொடுத்துவிட்டான் அன்றே?

    பொரு அல்லன் - அடியார்கள் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன். பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர்நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 1‘கிருஷ்ணனும் அருச்சுனனும் திரௌபதியும் அழகுள்ள சத்தியபாமையும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்திரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது? அம்மான் - இந்தத் தன்மைகளைக் காட்டி என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன். நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பிலம் - அவனுடைய ஒப்பு இல்லாத நற்குணங்களைப்பாடி, ஒரு போதும் பிரிந்து தரித்து இரேன். ‘ஆயின், எப்பொழுதும் இப்படி இருப்பீரோ?’ என்ன, பகலும் இரவும் - எல்லாக்காலமும். ‘ஆயின், விஷயத்தைக் குறைய அனுபவித்தோ?’ எனின், படிந்து குடைந்து - எங்கும் கிட்டி விஷயத்தை அனுபவியாநிற்கச் செய்தே விட மாட்டுகிற்றிலேன்.

(10)

77

        குடைந்துவண்டு உண்ணும் துழாய்முடி யானை
        அடைந்த தென்குரு கூர்ச்சட கோபன்
        மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து
        உடைந்து நோய்களை ஓடுவிக் கும்மே.

   
பொ-ரை : வண்டுகள் உள்ளே சென்று தேனை உண்ணும் படியான திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடையவனைப் பற்றுக்கோடாக அடைந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர், செறிந்த சொற்களால் தொடுத்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் நோய்களைத் நம் நிலை கெட்டு ஓடும்படி செய்யும்.

 

1. பாரதம், உத்தியோகபர். 49.