முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
305

எட

எட்டாந்திருவாய்மொழி - ‘ஓடும் புள்’

முன்னுரை

    மேல் திருவாய்மொழியில் ‘இறைவன் எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; 1அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில். ‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்தார்; இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின், சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அங்குநின்றும் சம்சாரிசேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. சௌசீல்யமாவது இப்படித் தாழவிட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு தான் 2பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. ‘சௌசீல்யம், ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப்படினும், வேறு வேறு என்பதே நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். ஸ்ரீ ஆளவந்தார் 3‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச்செய்து, பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச்செய்தார்.

    இத்திருவாய்மொழி 4இறைவனுடைய பரத்துவத்தைக் கூறுகிறது என்பாரும், பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது என்பாரும், மேல் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே

 

1. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,
  ‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி ‘ஆர்ஜவ
  குணத்தைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்’ என்கிறார்.

2. பரிமாறுதல் - கலத்தல்.

3. ஸ்தோத்திர ரத்தினம், 18.

4. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர்
  விண்ணோர்க்கு’ என்பது முதலான திருப்பாசுரங்களை நோக்கிப்
  ‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர். ‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம்
  அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப்பாசுரங்களை நோக்கிப்
  ‘பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது, என்பர். ‘அம்மான் சீர்,
  கற்பன் வைகலே என்ற திருப்பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’
  என்பர்.