முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
310

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.

    கண்ணாவான் - 2‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற கருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் - இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்தியசூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார். தண்ணார் வேங்கடம் - இறைவனுக்குக் காத்தற்கு உரிய பொருள்கள் கிடையாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவ்வுயிர்கட்குப் பாதுகாப்பவனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி இரு திறத்தார்க்கும் குளிர்ச்சியை உண்டாக்க வல்லது ஆதலின், ‘தண்ணார் வேங்கடம்’ என்கிறார். 3‘குளிர் அருவி வேங்கடம்’ என்பர் ஸ்ரீ ஆண்டாள். விண்ணோர் வெற்பன்-4‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார். இதனால்,

 

1. இருவினையும் இடைவிடா வெவ்வினையும்
        இயற்றாதே இமையோர் ஏத்தும்
  திருவினையு மிடுபதந்தேர் சிறுமையையும்
        முறைஒப்பத் தெளிந்து நோக்கிக்
  கருவினையது இப்பிறவிக்கு என்றுணர்ந்தங்
        கதுகளையும் கடையில் ஞானத்து
  அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளர் ஈண்
        டிருந்துமடி வணங்கற் பாலார்.

  முனிவரும் மறைவ லோரு முந்தைநாட் சிந்தை பூண்ட
  வினைவரு நெறியை மாற்றும் மெய்யுணா வோரும் விண்ணோர்
  எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
  அனைவரும் அருவி நன்னீர் நாளும்வந் தாடு கின்றார்.

  என்ற கம்பராமாயணச் செய்யுள்கள் இத்திருப்பாசுரத்தின் பொருளோடு ஒப்பு
  நோக்கத் தக்கன.

2. யஜூர் வேதம். 4. 6 : 8.

3. நாய்ச்சியார் திருமொழி, 8 : 3.

4. திருவாய். 3. 9 : 9.